Skip to content

“அதிமுக முகமூடியுடன் தமிழ்நாட்டிற்குள் நுழையும் பாஜகவை விரட்டியடிக்க வேண்டும்” – ஸ்டாலின் ஆவேசம்!

பரமக்குடி,ஏப்.13; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அன்றைய தினம் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் (மே) 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்களே இருப்பதால் அரசியல் கட்சியினர் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

பரமக்குடியில் வாக்கு சேகரித்த முதலமைச்சர் ஸ்டாலின்

அந்த வகையில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரமக்குடியில் நேற்று (ஏப்ரல் 12, ஞாயிறு) வாக்கு சேகரித்தார்.

அப்போது எமனேசுவரம் பகுதிக்குச் சென்ற ஸ்டாலின், அங்குள்ள வீட்டிற்குள் சென்று, அங்குள்ள கைத்தறியை இயக்கிப் பார்த்தார். ஆதரவு கோரினார். மேலும் அந்தக் குடும்பத்தினரிடம் உரையாடி அவர்கள் வீட்டில் தேநீர் அருந்தினார்.

திமுக அரசு கொண்டுவந்த திட்டங்களின் பயன் கிடைக்கிறதா என்றும் அவர்களிடம் கேட்டறிந்தார்.

‘ஜனநாயகன் பட விவகாரம்’ – பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் ஜனநாயகன் படம் வெளியான விவகாரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதிக்கு தொடர்பிருப்பதாக ஆதவ் அர்ஜூனாவின் கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்று ஸ்டாலின் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி விரக்தியின் உச்சத்தில் இருப்பதால் தொடர்ந்து அவர் திமுவை விமர்சித்து வருகிறார்; நான் தேர்தலுக்காக நடைபயிற்சி செல்லவில்லை; நான் எப்போதும் எங்கு சென்றாலும் நடைபயிற்சி செல்வேன்; அப்போது, மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்பேன்;

“அதிமுகவின் முகமூடியுடன் தான் பாஜக நுழைகிறது”

அதிமுகவின் முகமூடியுடன் தான் பாஜக தமிழ்நாட்டிற்குள் நுழைகிறது; அதனால் தான் திமுகவுக்கும் டெல்லிக்குமான போட்டி எனக் கூறி வருகிறேன் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

பின்னர் பரமக்குடியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய மு.க. ஸ்டாலின், தனது ஆட்சிக்கால சாதனைகளை பட்டியலிட்டு, எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்.

திமுக ஆட்சிக்கு வரும்போது தமிழ்நாடு என்ன நிலையில் இருந்தது?

திமுக ஆட்சி்ப் பொறுப்புக்கு வந்தபோது, தமிழ்நாடு என்ன நிலையில் இருந்தது? கொரோனாவில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கூட கிடைக்காத நிலையில் இருந்தது; தமிழ்நாட்டின் பொருளாதாரம் 0.07 விழுக்காடு என்று சரிந்து கிடந்தது. நிதிநிலைமை படுபாதாளத்தில் இருந்தது;

போர்க்கால அடிப்படையில் என்று சொல்வார்கள் அல்லவா… அது போன்று, முதலில் கொரோனாவில் இருந்து மக்களை மீட்டெடுத்தோம்; அடுத்து, திறமையான நிர்வாகத்தால் நிதி நிலைமையை மீட்டெடுத்திருக்கிறோம்; அதன் பயனாக, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக 11.19 விழுக்காடு என்ற டபுள் டிஜிட் பொருளாதார வளர்ச்சியை கொண்டு வந்திருக்கிறோம்; இதெல்லாம் சாதாரணமாக நடக்கவில்லை. கடுமையாக உழைத்திருக்கிறோம்;

5 ஆண்டுகளில் இயங்காத நாளே கிடையாது: ஸ்டாலின்

கடந்த ஐந்தாண்டுகளில் என்னை செய்திகளில் பார்க்காத நாள் இருக்காது. ஆய்வுக்கூட்டம் – கள ஆய்வுகள் – அரசு நலத்திட்ட விழாக்கள் – காணொளி வாயிலாக திறப்பு விழாக்கள் – நேரடியாக மக்கள் சந்திப்பு என தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்தேன்; நான் மட்டுமல்ல, அரசு இயந்திரத்தையே முழுமையாக செயல்பட வைத்தேன்; அமைச்சர்கள் தொடங்கி, கடைநிலை ஊழியர்கள் வரைக்கும், கடுமையான உழைப்பைப் போட்டு, இன்று இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாட்டை கொண்டு வந்திருக்கிறோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

மகளிருக்கான விடியல் பயணம் மற்றும் உரிமைத் தொகை

திராவிட மாடல் ஆட்சியின் முத்திரை திட்டமான ‘விடியல் பயணத் திட்டம்’ மூலம் இதுவரை 935 கோடிக்கும் அதிகமான பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், “திராவிட மாடல் 2.0 ஆட்சியில் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அத்துடன், ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ மூலம் வழங்கப்படும் தொகை ரூ.2,000-ஆக உயர்த்தப்படும்” என திமுக அளித்துள்ள வாக்குறுதியையும் முதலமைச்சர் நினைவுபடுத்தினார்.

மாணவர்களுக்கான புதிய அறிவிப்புகள்

அரசுப் பள்ளியில் படித்து கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு வழங்கப்படும் ‘புதுமைப்பெண்’ மற்றும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்ட நிதி ரூ.1,000-லிருந்து ரூ.1,500-ஆக உயர்த்தப்படும் என முதல்வர் அறிவித்தார். மேலும், காலை உணவுத் திட்டம் இனி 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

பாஜக மற்றும் அதிமுக மீதான விமர்சனம்

மக்கள்தொகை கட்டுப்பாட்டை காரணம் காட்டி நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைக்க பார்க்கும் பாஜகவின் செயலை ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து எதிர்க்கும் என ஸ்டாலின் கூறினார். எடப்பாடி பழனிசாமி பாஜகவின் அட்டூழியங்களைக் கண்டு அஞ்சி ‘சைலண்ட் மோடுக்கு’ சென்றுவிடுவதாக எள்ளி நகையாடிய ஸ்டாலின், தமிழ்நாட்டைப் பாதுகாக்கும் ‘திராவிடப் பெருஞ்சுவரை’ யாராலும் தகர்க்க முடியாது என எச்சரித்தார்.

ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில், சுயநலத்திற்காக தமிழ்நாட்டை அடகு வைக்கும் கூட்டத்தை மக்கள் விரட்டியடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். இந்த தேர்தல் வெறும் திமுகவின் வெற்றிக்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கான வெற்றி என்றும் கூறி மு.க.ஸ்டாலின் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *