Skip to content

அனல் பறக்கும் தேர்தல் களம்; திருச்சி கிழக்கு தொகுதியில் இன்று விஜய் பரப்புரை!

திருச்சி, ஏப்.19; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (ஏப்ரல் 19, 2026) திருச்சி கிழக்கு தொகுதியில் பரப்புரை மேற்கொள்கிறார்.

நடிகரும் தவெக தலைவருமான விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் நேற்று (ஏப்ரல் 18, 2026) வீடு வீடாகச் சென்று தனக்கு வாக்கு சேகரித்தார்.

திருச்சி கிழக்கில் இன்று வாக்கு சேகரிக்கிறார் விஜய்

இதன் தொடர்ச்சியாக திருச்சி கிழக்கு தொகுதியில் இன்று (ஏப்ரல் 19, 2026) பரப்புரையில் ஈடுபடுகிறார். இதற்காக சென்னையிலிருந்து தனி விமானத்தில் இன்று மதியம் 2 மணியளவில் திருச்சிக்கு வருகை தருகிறார். பின்னர் பிற்பகல் 3 மணி முதல் 7 மணி வரை திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டு தனக்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.

பல்வேறு சமூகப் பெரியவர்களையும் சந்திக்க திட்டம்

இன்று மாலை கே.கே. நகர் மற்றும் விமான நிலையல் அருகிலுள்ள ஒயர்லெஸ் ரோடு பகுதிகளில் விஜய் திறந்த வேனில் சென்று வாக்கு சேகரிக்கிறார். முன்னதாக திருச்சி கிழக்கு தொகுதியில் வசிக்கும் பல்வேறு சமூகப் பெரியவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்து ஆதரவு கோரவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

அரியமங்கலம், மரக்கடை சந்திப்பு மற்றும் எம்.ஜி.ஆர் சிலை ஆகிய பகுதிகளில் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

பரப்புரைக்கு 10 பொதுவான நிபந்தனைகளுடன் அனுமதி

பின்னர் தனது பரப்புரையை முடித்துக்கொண்டு இரவு 7 மணியளவில் விமானநிலையத்திற்கு திரும்புகிறார்.

விஜய் பரப்புரையில் ஈடுபட தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக திருச்சியில் விஜய் பரப்புரையில் ஈடுபட தேர்தல் நடத்தும் அலுவலர் 10 பொதுவான நிபந்தனைகளுடன் காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் விதிக்கும் நிபந்தனைகளை பின்பற்றுமாறும் கூறி அனுமதி வழங்கினார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

விஜய்யின் வருகையை முன்னிட்டு திருச்சி மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசியலில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளதாக நம்பப்படும் தமிழக வெற்றிக் கழகம், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிய மே 4ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *