சென்னை,மார்ச்.28; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ஆளும் திமுக அமைச்சர்களின் 3 தொகுதிகளில் நேரடியாகக் களம் இறங்குவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கை வெளியீடு
சென்னையில் இன்று (மார்ச் 28, 2026) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், தனது கட்சியின் 11 வேட்பாளர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். வேட்பாளர் பட்டியலோடு, கட்சியின் தேர்தல் அறிக்கையையும் அவர் வெளியிட்டு, தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளார்.
- நாங்குநேரி -இசக்கிமுத்து,
- ஒட்டப்பிடாரம் – சுந்தர் ராஜன்,
- மடத்துக்குளம் – சண்முகவேலு,
- பூந்தமல்லி (தனி) – ஏழுமலை,
- பெரியகுளம் (தனி) – கதிர்காமு,
- திருவையாறு – வேலு கார்த்திகேயன்,
- காரைக்குடி – தேர்போகி பாண்டி,
- திருப்பத்தூர் – ஞானசேகரன்.
மூன்று திமுக அமைச்சர்களுடன் நேரடி மோதல்
அமமுக போட்டியிடும் 11 தொகுதிகளில், மூன்று தொகுதிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில், அங்கு திமுகவின் செல்வாக்குமிக்க அமைச்சர்கள் தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.
சைதாப்பேட்டை: இங்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் எம்.எல்.ஏ-வாக உள்ளார். இவரை எதிர்த்து அமமுக சார்பில் செந்தமிழன் போட்டியிடுகிறார்.
திருச்சி மேற்கு: செல்வாக்குமிக்க அமைச்சர் கே.என். நேருவின் தொகுதியான இதில், அமமுக வேட்பாளராக தொட்டியம் ராஜசேகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மன்னார்குடி: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தத் தொகுதியில், அமமுக சார்பில் எஸ். காமராஜ் களம் காண்கிறார்.
3 திமுக அமைச்சர்களின் கோட்டைகளை தகர்க்குமா அமமுக?
தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் நான்கு முனைப் போட்டி நிலவும் இந்த தேர்தலில், ஆளுங்கட்சி அமைச்சர்களின் தொகுதிகளில் அமமுக வேட்பாளர்களை நிறுத்தியிருப்பது கடும் போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர்களின் கோட்டைகளை அமமுக தகர்க்குமா அல்லது திமுக தனது செல்வாக்கை நிலைநாட்டுமா என்பது மே மாதம் தேர்தல் முடிவுகளில் தெரியவரும்.
