சென்னை,ஜூன்.02; ‘அரசியல் தந்திரங்களையும், ஜனநாயக மாண்புக்கு எதிரான வேலைகளையும் செய்துவிட்டு, இப்போது திருச்சியில் ஏதோ ‘அரசியல் புனிதர்’ போலப் புளுகுமூட்டைகளை அவிழ்த்து விடுவதைப் பார்த்துத் தமிழ்நாடு சிரிப்பதாக முதலமைச்சர் விஜய்யை திமுக கடுமையாக விமர்சித்துள்ளது. உங்கள் நிர்வாகத் தோல்வியை மறைக்க, பிறர் மீது நீங்கள் பழிபோடும் தரமற்ற அரசியல் எங்கே?’ என முதலமைச்சர் விஜய்யை திமுக விமர்சித்துள்ளது.
திருச்சியில் நேற்று (ஜூன் 01, 2026) நடைபெற்ற நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், திமுக மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
முதலமைச்சர் விஜய்யின் குற்றச்சாட்டும் திமுகவின் பதிலடியும்
திருச்சி மேடையில் பேசிய முதலமைச்சர் விஜய், தன்னை யாரோ ஆட்சியமைக்க விடாமல் தடுத்ததாகக் கூறி முதலைக் கண்ணீர் வடிக்கிறார் என்று திமுக விமர்சித்துள்ளது. நாட்டின் அரசமைப்புச் சட்டம் (Constitution) என்றால் என்னவென்றே அவருக்குத் தெரியவில்லை என்பது அவரது பேச்சிலேயே அப்பட்டமாகத் தெரிகிறது என்று திமுக ஐடி விங் பதிவிட்டுள்ளது. மேலும், “உண்மையிலேயே உங்களுக்குத் திராணி இருந்தால், ஆளுநரிடம் நீங்கள் அளித்த உரிமைகோரல் கடிதங்களை மக்கள் மன்றத்தில் வெளியிடுங்கள்” என்றும் சவால் விடுத்துள்ளது.
காரில் அரங்கேறிய அரசியல் அசிங்கமும் குதிரை பேரமும்
தமிழ்நாடு அரசியலில் இதுவரை யாரும் செய்யத் துணியாத வகையில் முதலமைச்சர் விஜய் திரைமறைவு வேலைகளைச் செய்ததாக திமுக குற்றஞ்சாட்டியுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு அதிமுகவின் ஒரு தரப்பினரைச் சந்தித்து, அவர்களைக் கொறடா உத்தரவை மீறி வாக்களிக்கச் செய்த பச்சையான குதிரை பேரத்தை நடத்தியது யார்? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், அமமுக உறுப்பினர் காமராஜை காரில் வைத்து அவசரகதியில் கையெழுத்து வாங்கியதும், அந்தக் காணொளியை விஜய் கட்சியினரே சமூக வலைத்தளங்களில் பரப்பி அம்பலப்படுத்தியதும் தான் அவர்களின் நேர்மையா? என்று திமுக சாடியுள்ளது. இத்தனை அரசியல் தந்திரங்களையும் செய்துவிட்டு, திருச்சியில் ஏதோ ‘அரசியல் புனிதர்’ போலப் புளுகுமூட்டைகளை அவிழ்த்து விடுவதைப் பார்த்துத் தமிழ்நாடே சிரிக்கிறது என்று திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு கடுமையாக விமர்சித்துள்ளது.
படு பாதாளத்தில் நிர்வாகம்: திமுகவின் குற்றச்சாட்டு
ஆட்சிக்கு வந்து ஆறு நாட்கள் கூடத் தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்குத் தற்போதைய நிர்வாகம் படு பாதாளத்தில் இருப்பதாகத் திமுக மற்றொரு பதிவில் சுட்டிக்காட்டியுள்ளது. தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் கொடுமைகள் நடந்து வருவதாகவும், இது போதாதென்று மின்சாரம் (Current) இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
“முதலமைச்சர் ஆனதை மறந்துவிட்டீர்களே ஜோசப் விஜய்”
“நீங்கள் முதலமைச்சர் ஆனதையே மறந்துவிட்டு, வழக்கம் போல மேடை ஏறி திமுக மீது பழியைப் போட்டு ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். முதலமைச்சர் நாற்காலி வேண்டும், ஆனால் யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்றால் எப்படி?” என்று திமுக காட்டமாகக் கேட்டுள்ளது.
மக்கள் தீர்ப்பை மதித்து, தேர்தல் முடிவுகள் வெளியான முதல் நாளே திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகத் திமுக செயல்படும் என்று நெஞ்சை நிமிர்த்தி அறிவித்த அரசியல் அறத்தை நினைவுகூர்ந்துள்ள திமுக, முதலமைச்சர் விஜய் ஆளத் தெரியாமல் அடுத்தவர்கள் மீது பழியைப் போட்டுத் தப்பிக்கப் பார்க்காமல், முதலில் மக்கள் கொடுத்த வேலையைக் கவனிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
