அவினாசி, ஏப்.14; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (ஏப்ரல் 14, செவ்வாய்) திருப்பூர் மாவட்டம் அவினாசி மற்றும் பெருமாநல்லூர் பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.
திருப்பூர் வருகை தரும் விஜய்
தமிழக வெற்றிக் கழகம் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், காங்கேயம், தாராபுரம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 8 தொகுதிகளில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் இன்று (ஏப்ரல் 14, செவ்வாய்) மாலை திருப்பூரில் பரப்புரை மேற்கொள்கிறார்.
தனி விமானம் மூலம் கோவை செல்லும் விஜய்
இதற்காக சென்னையிலிருந்து இன்று தனி விமானம் மூலம் கோவைக்கு விஜய் வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் அவினாசி வந்து சேர்கிறார்.
பிறகு மதியம் 3 மணிக்கு ஆட்டையாம்பாளையம் பிரிவிருந்து பரப்புரை வாகனத்தில் சென்று அவினாசி பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் சாலை வலம் சென்றுவேனில் இருந்து வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபடுகிறார்.
விஜய் வருகையை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு
இன்று (ஏப்ரல் 14, செவ்வாய்) மாலை பெருமாநல்லூர் நான்கு ரோடு சந்திப்பில் விஜய் பரப்புரையில் ஈடுபடுகிறார். விஜய்யின் வருகையை முன்னிட்டு அவினாசி மற்றும் பெருமாநல்லூர் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வரவேற்பு ஏற்பாடுகளை தீவிரமாகச் செய்து வருகின்றனர்.
தருமபுரி பரப்புரை ரத்து; தவெக தொண்டர்கள் அதிர்ச்சி
இதனிடையே, தருமபுரியில் இன்று விஜய் மேற்கொள்ளவிருந்த பரப்புரை ரத்து செய்யப்படுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. இதன் காரணமாக தவெக தொண்டர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். மக்கள் செல்வாக்கும், இளைஞர்களின் ஆதரவும் விஜய்க்கு எந்த அளவிற்கு கைகொடுக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
