Skip to content

ஆட்சியை பிடிக்கப்போவது யார்…? மக்களின் தீர்ப்பு என்ன..? இன்று வாக்கு எண்ணிக்கை; எகிறும் எதிர்பார்ப்பு!

சென்னை,மே.04; 234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் (ஏப்ரல்) 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். மொத்தமுள்ள 5.73 கோடி வாக்காளர்களில் 4.88 கோடி பேர் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் 85.10 சதவீத வாக்குப்பதிவு பதிவானது.

62 மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை

இதுபோன்ற சூழலில், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (ஏப்ரல் 4, திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் அடுத்த ஆட்சியை அமைக்கப் போவது யார்? மக்கள் தீர்ப்பு யாருக்கு? என்ற பெரும் எதிர்பார்ப்பில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தி.மு.க. ஆட்சியைத் தக்கவைத்து வரலாறு படைக்குமா? அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுமா? தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆட்சியைப் பிடிப்பாரா? அல்லது எதிர்க்கட்சித் தலைவராக சட்டப்பேரவைக்குள் நுழைவாரா? என்பன போன்ற கேள்விகளுக்கு இன்று தெளிவான பதில்கள் கிடைத்துவிடும்.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும், பிறகு இயந்திரங்கள்

காலை 6 மணி முதலே வாக்கு எண்ணும் பணியாளர்கள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு, காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன்படி முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.

11 மணி முதல் முன்னிலை நிலவரங்கள் வெளியாக வாய்ப்பு

காலை 11 மணி முதல் முன்னணி நிலவரங்கள் தெளிவாக தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ முடிவுகள் மாலை முதல் நள்ளிரவு வரை படிப்படியாக வெளியாகலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையின் அதிகாரப்பூர்வ முடிவுகளும் தேர்தல் நடத்தும் அதிகாரியால் வெளியிடப்படும்.

வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

வாக்கு எண்ணும் பணிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு தேர்தல் தேர்தல் பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.

70 கம்பெனி துணை ராணுவப்படையினர் உட்பட 18 ஆயிரம் போலீசார் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், அசம்பாவிதங்களைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார்? எகிறும் எதிர்பார்ப்பு

தேர்தலில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும் மீண்டும் போட்டியிட்டுள்ளனர். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் களம் கண்டனர்.

தமிழ்நாட்டை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆளப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் முக்கிய நாள் இன்று என்பதால் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *