ஆத்தூர் தொகுதி ( எண் – 129)
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தொகுதி, இதுவரை 16 முறை தேர்தலைச் சந்தித்துள்ளது.
அதில், அதிகபட்சமாக திமுக 9 முறையும், அதிமுக ஐந்து முறையும், காங்கிரஸ் இரு முறையும் வென்றுள்ளன.
நாவலர் நெடுஞ்செழியன் ஒரு முறை வென்ற தொகுதி
பேரறிஞர் அண்ணாவால் நாவலர் என அழைக்கப்பட்ட இரா.நெடுஞ்செழியன் இத்தொகுதியில் ஒரு முறை வென்றுள்ளார்.
இங்கு ஒக்கலிக கவுண்டர் (27%), பிள்ளைமார் (22%), ஆதிதிராவிடர் (16%), செட்டியார் (12%), வன்னியர் (9%), மறவர் (8%) சமூகத்தினர் பரவலாக உள்ளனர்.
அமைச்சர் ஐ.பெரியசாமி 6 முறை வென்ற தொகுதி
இத்தொகுதியில் ஆறு முறை வெற்றிபெற்றுள்ள தற்போதைய அமைச்சரான ஐ.பெரியசாமி முக்குலத்தோர் சமூகத்தில் உள்ள அகமுடையோர் பிரிவைச் சேர்ந்தவர்.
திமுகவில் இம்முறையும் அவருக்கே வாய்ப்பு கிடைக்கும் எனப் பேசப்படுகிறது. தொகுதியில் இருக்கும்போதெல்லாம் மக்களிடம் மனுக்களைப் பெற்று நடவடிக்கை எடுப்பது, மக்களின் அனைத்து சுக, துக்க நிகழ்ச்சிகளில் கட்சி பாகுபாடின்றி கலந்துகொள்வது இவருக்கு பிளஸ்.
ஐ.பெரியசாமி மீது அதிருப்தியும் உண்டு
கட்சிக்காரர்கள் மத்தியிலும் நல்ல செல்வாக்கு உள்ளது. ஆனால், தொகுதியில் இளைஞர்களுக்கு பெரியளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை என்பது பெரியசாமிக்கு மைனஸ்.
அதிமுகவில் சிவராமன் என்பவர் சீட் கேட்கிறார். அதிமுக கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமக இணைந்தால், அக்கட்சியின் பொருளாளர் திலகபாமாவுக்கு சீட் கிடைக்கலாம் எனத் தெரிகிறது.
கடந்த தேர்தலில் ஐ.பெரியசாமிக்கு 1,66,000 வாக்குகள் கிடைத்தன. அவருக்கு அடுத்தபடியாக வந்த பாமகவின் திலகபாமா 30,000 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சியின் சைமன் ஜஸ்டின் 17,000 வாக்குகளையும் பெற்றனர்.
புதுவரவுகள் இருந்தாலும் திமுக தான் முந்துகிறது
இம்முறை தவெகவும் களத்திற்கு வருவதால், வாக்குகள் கணிசமாக சிதற வாய்ப்புள்ளது.ஆனாலும், ஆத்தூர் தொகுதியில் ஐ.பெரியசாமிக்கான வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக பேசப்படுகிறது.
