Skip to content

ஆளுநரிடம் பட்டம்பெற மறுத்த விவகாரம்; மாணவியின் செயல்-நீதிமன்றம் அதிருப்தி

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், ஆளுநரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்துகொண்டது ஏற்புடையதல்ல என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பட்டமளிப்பு விழாலில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு, மாணாக்கருக்கு பட்டச்சான்றுகளை வழங்கினார். அப்போது முனைவர் பட்டம் பெறவந்த மாணவி ஜீன் ஜோசப் ஆளுநரிடம் பட்டம் பெறாமல், அருகில் இருந்த துணைவேந்தரிடம் பட்டச்சான்றை காட்டிவிட்டு மேடையிலிருந்து இறங்கினார். அனைவரது முன்னிலையில் சபை நாகரிகமின்றி அந்த மாணவி நடந்து கொண்ட இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ஆளுநர் ரவி, தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார்-அதனால் அவரிடம் பட்டம்பெற விரும்பவில்லை என்று கூறியிருந்தார். விசாரணையில், மாணவி ஜீன் ஜோசப் நாகர்கோவில் நகர திமுக துணை செயலாளர் ராஜன் என்பவரது மனைவி என்பது தெரியவந்தது. இந்த சர்ச்சையை தொடர்ந்து, பல்கலை வேந்தரான ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்து அவமதித்த மாணவி ஜீன்ஜோசப்பின் முனைவர் பட்டத்தை ரத்து செய்யக்கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடுத்தார். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல. இதை ஒருபோதும் ஏற்க முடியாது என தெரிவிக்கப்பட்டது. இதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும். பல்கலைக்கழகத்தின் மாண்பை காக்க வேண்டும். இளைய தலைமுறைகளுக்கு உரிய வழிகாட்ட வேண்டும். எனவே, மனுதாரர் மற்றும் பல்கலைக்கழக வழக்கறிஞர் பதில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு டிசம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *