Skip to content

ஆளுநர் அர்லேகருடன் முதலமைச்சர் விஜய்யின் தனிச் செயலாளர் சந்திப்பு; அமைச்சரவை விரிவாக்கம் குறித்துப் பேசியதாகத் தகவல்!

சென்னை,மே.16; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியிடப்பட்டு, 10ஆம் தேதி முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றார். அவருடன் மேலும் 9 அமைச்சர்களு் பதவியேற்றுக் கொண்டனர்.

பதவியேற்பு நிகழ்ச்சி நிறைவடைந்து 6 நாட்களாகியும் அவர்களுக்கான துறைகள் (இலாகா) இதுவரை ஒதுக்கப்படவில்லை. இது குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் தரப்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்படாததால் பணிகள் முடக்கம்

அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்படாத போதிலும், அவர்கள் பத்திரிகையாளர்களிடம் பல்வேறு விசயங்களைப் பேசி வருகின்றனர்.

அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டால்தான், தற்போது நிலுவையில் உள்ள பல்வேறு துறை பணிகள் தொடங்கும் என்று தலைமைச் செயலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

நிலுவையில் 3,000-க்கும் அதிகமான கோப்புகள்

அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்படாமல் இருந்தால் பல துறைப் பணிகள் முடங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. 3000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோப்புகள் கையெழுத்திடாமல் நிலுவையில் உள்ளது.

காங்கிரஸ், அதிமுகவின் S.P. வேலுமணி அணி உள்ளிட்டோருக்கு அமைச்சரவையில் எத்தனை இடங்களை ஒதுக்குவது, எந்தெந்த துறைகளை வழங்குவது என்பன குறித்து அவர்களுடன் தவெக தலைமை பேசி வருவதாகக் கூறப்படுகிறது.

விஜய்யின் தனிச் செயலாளர் ஆளுநர் அர்லேகருடன் சந்திப்பு

இதனால் தான் ஏற்கனவே பதவியேற்ற அமைச்சர்களுக்கு இதுவரை துறைகள் ஒதுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

இதுபோன்ற சூழலில் தான், முதலமைச்சரிந் தனிச் செயலாளர் செந்தில்குமார், பொறுப்பு ஆளுநர் அர்லேகரை இன்று (மே 16, 2026) சந்தித்துப் பேசினார்.

சென்னை கிண்டியில் உள்ள மக்கள் பவனில் (ராஜ் பவன்) நடைபெற்ற இச்சந்திப்பின்போது, அமைச்சர்களுக்கான துறைகளின் விவரங்கள் ஆளுநரிடம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அமைச்சரவை விரிவாக்கம்; விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்

அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான தகவல்களும் ஆளுநர் அர்லேகரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆளுநரின் ஒப்புதலுக்குப் பிறகு, இன்னும் ஓரிரு நாட்களில் அமைச்சர்களுக்கான துறை ஒதுக்கீடு மற்றும் அமைச்சரவை விரிவாக்கம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *