Skip to content

இந்தியா துண்டு துண்டாக வேண்டும்: வங்கதேச முன்னாள் ராணுவ அதிகாரி ஆத்திரமூட்டும் கருத்து

டாக்கா, டிச.07 ; வங்கதேசத்தின் அமைதிக்காக இந்தியா துண்டு துண்டாக வேண்டும் என்று, அந்நாட்டின் முன்னாள் ராணுவ பிரிகேடியர் ஜெனரல் ஒருவர் தெரிவித்துள்ள கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. (Jamaat-e-Islami) ஜமாத்-இ-இஸ்லாமி என்ற கட்சியின் முன்னாள் தலவைரான (Ghulam Azam) குலாம் அசாமின் மகன் (Abdullahil Amaan Azmi) அப்துல்லாஹில் அமன் அஸ்மி முன்னாள் ராணுவ பிரிகேடியர் ஜெனரல் ஆவார்.  1971 வங்கதேச விடுதலைப் போரின் போது இந்துக்கள் மற்றும் விடுதலைக்கு ஆதரவான வங்காளிகளின் இனப்படுகொலைக்கு காரணமான  (Ghulam Azam) குலாம் அசாமி போர்க்குற்றத்திற்காக  தண்டனை பெற்றவர். இந்தப் பின்னணி ஒருபுறமிருக்க, அப்துல்லாஹில் அமன் அஸ்மி டாக்காவில் உள்ள தேசிய பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற ஆன்லைன் விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.  அதில் அவர், “இந்தியா துண்டு துண்டாக உடைக்கப்படாவிட்டால்  வங்கதேசம்  முழு அமைதியைக் காணாது“ என்று ஆத்திரமூட்டும் வகையில் பேசினார்.  அதுமட்டுமின்றி டெல்லி “டெல்லி  (இந்திய அரசு) எப்போதும் வங்கதேசத்தில் அமைதியின்மை உயிர்ப்புடன்  வைத்திருக்கிறது“ என்று அஸ்மி குற்றஞ்சாட்டினார். இந்தியாவின் எல்லையில் உள்ள தென்கிழக்கு வங்கதேசத்தில் இருக்கும் சிட்டகாங் பிரிவில் அமைந்துள்ள மூன்று மலைப்பாங்கான மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியில்  1975 முதல் 1996 வரை இந்தியா அமைதியின்மையை தூண்டியதாகவும் அவர் சாடினார். ஷேக் முஜிபுர் ரஹ்மான் ஆட்சியின்போது , பர்பத்ய சட்டோகிராம் ஜன சம்ஹாட்டி சமிதி (PCJSS) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் ஆயுதப்பிரிவான சாந்தி பஹினி-க்கு இந்தியா அடைக்கலம் கொடுத்து ஆயுதங்கள் மற்றும் பயிற்சி வழங்கியது; அது சிட்டகாங் மலைப்பகுதி இரத்தக்களரி ஆக வழிவகுத்தது என்றெல்லாம் இந்தியாவுக்கு ஆத்திரமூட்டும் வகையில், முன்னாள் ராணுவ பிரிகேடியர் ஜெனரல் அஸ்மி பேசியுள்ளார். வங்கதேசத்தில்  சர்ச்சைக்குரிய நபராக இருந்துவரும் அஸ்மி, இந்தியாவை விமர்சிக்கவும் பிராந்திய புவிசார் அரசியல் குறித்து கருத்து தெரிவிக்கவும் சமூக ஊடகங்களை அடிக்கடி பயன்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. ஷேக் ஹசீனா தலைமையிலான  அரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் உறவுகளில் ஏற்பட்ட  விரிசலை சரிசெய்ய இந்தியாவும் வங்கதேசமும் முயற்சி எடுத்துவரும் வேளையில், அப்துல்லாஹில் அமன் அஸ்மி இத்தகைய கருத்துகளை பேசியிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி  உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *