கொல்கத்தா, டிச.13; கால்பந்து உலகின் முடிசூடா மன்னனாக பார்க்கப்படும் லியோனல் மெஸ்ஸி, மூன்று நாள் பயணமாக இந்தியா வந்து சேர்ந்தார். இன்று (13.12.2025) அதிகாலை கொல்கத்தா வந்தடைந்த மெஸ்சியை வரவேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உறக்கமின்றி காத்திருந்தனர். கொல்கத்தா, ஐதராபாத், மும்பை மற்றும் டெல்லி என நான்கு நகரங்களில் மெஸ்சி மேற்கொள்ளும் இந்த மூன்று நாள் பயணத்தின் முழுமையான விவரங்களை இங்கே காண்போம்.
கொல்கத்தாவில் மெஸ்சி: முதல் நாள் நிகழ்ச்சிகள்
சனிக்கிழமை (டிசம்பர் 13) அதிகாலை 2:26 மணியளவில் மெஸ்சி கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறங்கினார். அவருடன் லூயி சுவாரஸ் மற்றும் ரோட்ரிகோ டி பால் ஆகியோரும் வந்துள்ளனர். கொல்கத்தா சால்ட் லேக் ஸ்டேடியத்தில் நடைபெறும் பிரமாண்ட நிகழ்ச்சியில் மெஸ்சி பங்கேற்கிறார். குழந்தைகளுக்கான “மாஸ்டர் கிளாஸ்” பயிற்சி, மேற்கு வங்காளத்தின் சந்தோஷ் கோப்பை வென்ற அணிக்கு பாராட்டு விழா மற்றம் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
சிறப்பு விருந்தினர்கள்: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
சிலை திறப்பு: லேக் டவுனில் மெஸ்ஸியின் 70 அடி உயர பிரமாண்ட சிலையை மெஸ்சி காணொளி வாயிலாகத் திறந்து வைக்கிறார். இதனைத் தொடர்ந்து பிற்பகல் 2:05 மணியளவில் ஐதராபாத் புறப்படுகிறார்.
ஹைதராபாத், மும்பை மற்றும் டெல்லி பயண விவரங்கள்
கொல்கத்தாவைத் தொடர்ந்து மற்ற முக்கிய நகரங்களிலும் மெஸ்ஸி பங்கேற்கும் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதில் ஒரு சிறிய காட்சி கால்பந்து போட்டி மற்றும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உடனான சந்திப்பு ஆகியவை அடங்கும்.
மும்பை: வான்கடே மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். மேலும், சிசிஐ-யில் (CCI) நடைபெறும் பேடல் கப் (Padel Cup) மற்றும் லூயிஸ் சுவாரஸ், டி பால் ஆகியோருடன் இணைந்து 45 நிமிட தொண்டு நிறுவன பேஷன் ஷோவிலும் பங்கேற்கிறார்.
டெல்லி (கடைசி கட்டம்): தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கிறார். மினர்வா அகாடமியின் இளம் வீரர்களைப் பாராட்டும் நிகழ்வு மற்றும் பிரபலங்கள் பங்கேற்கும் கால்பந்து போட்டியுடன் பயணம் நிறைவடைகிறது.
ரசிகர்களின் உற்சாகம் மற்றும் வரலாற்றுப் பின்னணி
கொல்கத்தா நகரம் கால்பந்து ஜாம்பவான்களை வரவேற்பதில் நீண்ட வரலாறு கொண்டது. 1977-ல் பீலே, பின்னர் மரடோனா, ஆலிவர் கான் போன்ற ஜாம்பவான்களைத் தொடர்ந்து தற்போது உலகக்கோப்பை நாயகன் மெஸ்சியின் வருகை நகரத்தையே விழாக்கோலமாக்கியுள்ளது. 2011-க்குப் பிறகு மெஸ்சி இந்தியா வருவது இதுவே முதல் முறை என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.
