Skip to content

இந்தோனேசியாவில் வெள்ளம்; 900-க்கும் அதிகமானோர் பலி

ஜகார்த்தா, டிச.07; இந்தோனேசியாவில் வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 900-ஐத் தாண்டியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் கடந்த வாரம் மலாக்கா நீரிணையில் உருவான ஒரு அரிய மற்றும் சக்திவாய்ந்த சூறாவளி புயல் அந்நாட்டை கடுமையாகத் தாக்கியது. இதனால்  பலத்தமழை பெய்து,  பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  சக்திவாய்ந்த சூறாவளியால் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான  வீடுகள் அழிக்கப்பட்டன. பல மாநிலங்களில்  வெள்ளத்தில்  ஏராளமான வீடுகள்  அடித்துச் செல்லப்பட்டன.  பல பகுதிகள், குடியிருப்புகள் இருந்த அடையாளமே தெரியாத அளவுக்கு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.  வெள்ளம் காரணமாக நிலச்சரிவும் ஏற்பட்டதால் ஏராளமானோர் உயிருடன் மண்ணுக்குள் புதைந்தனர். அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான  வீடுகளில் மேல் தளம் வரை வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர். வீடுகளின் மேற்கூரைகள் மீது மக்கள் ஏறி அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது.  வெள்ளத்தில் காணாமல் போனவர்களைத் தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இயற்கைப் பேரிடரைப் பயன்படுத்தி பல பகுதிகளில்  பல்பொருள் அங்காடிகளுக்குள் புகுந்த நபர்கள், அங்கிருந்த பொருட்களை அள்ளிச் சென்றுவிட்டனர்.  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்குள் செல்ல முடியாமல் மீட்புப் படையினர்  திணறி வருகின்றனர்.  இதனால்  நிவாரண  உதவிகளை  கொண்டு சேர்க்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. தென்கிழக்கு ஆசியாவை தாக்கிய சூறாவளிகளில்  இது மிக மோசமானதாகப்  பார்க்கப்படுகிறது. இந்த இயற்கை சீற்றத்தால் மலேசியா மற்றும் வியட்நாமில் ஒட்டுமொத்தமாக சுமார்  2,000 பேர் உயிரிழந்துவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *