Skip to content

இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவு: மு.க.ஸ்டாலின் உருக்கமான இரங்கல் செய்தி!

சென்னை,ஜூன்.10; தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றி, கிராமத்து மண்ணின் மணத்தை வெள்ளித்திரையில் தவழவிட்ட ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா இன்று (ஜூன் 10, 2026) காலமானார். அவரது மறைவுக்கு முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ஆழந்த இரங்கலையும், நினைவுகளையும் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் புதிய திசைவழியை உருவாக்கியவர்

பாரதிராஜாவின் மறைவு குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

“தமிழ் சினிமாவின் பாதையை மாற்றி அமைத்து, ஒரு புதிய திசைவழியை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இது எனக்கு அளவற்ற துயரத்தைத் தருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஸ்டூடியோக்களுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த தமிழ் சினிமாக் கேமராக்களை, கிராமத்து வீதிகளுக்குக் கொண்டு சென்ற பெருமை பாரதிராஜாவையே சேரும் என்றும், அவர் சினிமாவுக்கென்று ஒரு தனித்துவமான மொழியை உருவாக்கி, தனக்கென ஒரு சகாப்தத்தை நிறுவினார் என்றும் புகழஞ்சலி சூட்டியுள்ளார்.

காலத்தால் அழியாத காவியங்கள்

தமிழ் சினிமா வரலாற்றை எழுதும்போது பாரதிராஜாவின் படைப்புகளை எவராலும் கடந்து போக முடியாது என்பதை சுட்டிக்காட்டியுள்ள மு.க.ஸ்டாலின், அவரது மிகச்சிறந்த படங்களை பட்டியலிட்டுள்ளார்:

16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, கருத்தம்மா.

இப்படங்கள் அனைத்தும் தமிழ் திரையுலகின் மைல்கற்கள் என்றும், தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் பாரதிராஜா தனது முத்திரையை ஆழமாகப் பதித்துள்ளார் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கலைஞர் உடனான நட்பு மற்றும் தமிழினப் பற்று

மறைந்த மு.கருணாநிதி மீது பாரதிராஜா கொண்டிருந்த அளப்பரிய அன்பையும், பற்றையும் மு.க.ஸ்டாலின் தனது செய்தியில் நினைவு கூர்ந்துள்ளார். தமிழ் மண், தமிழ் மொழி மற்றும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகத் திரைத்துறையினரை ஒருங்கிணைத்து பல்வேறு போராட்டங்களில் பாரதிராஜா முன்னின்றதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் பாரதிராஜாவைச் சந்தித்து நலம் விசாரித்ததையும், அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதையும் குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், அந்த நினைவுகள் இப்போது தனது நெஞ்சில் பாரமாக அழுத்துவதாக உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

அரசு மரியாதை மற்றும் இறுதி அஞ்சலி

அல்லி நகரத்தில் பிறந்து, ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நெஞ்சங்களிலும் குடியேறிய பாரதிராஜா என்றும் மக்களின் நினைவுகளில் வாழ்வார்.

பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த கலை உலகிற்கும், தமிழ் சமூகத்திற்கும் ஒரு பேரிழப்பாகும். “என் இனிய தமிழ் மக்களே…” என்ற கம்பீரக் குரலுக்குச் சொந்தக்காரரான இயக்குநர் இமயம் நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவர் விட்டுச் சென்ற கலைப் பொக்கிஷங்களும், காலத்தால் அழியாத திரைப்படங்களும் தலைமுறைகள் கடந்தும் அவரது புகழைப் பாடிக்கொண்டே இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *