Skip to content

இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம்; ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா அதிரடி தாக்குதல்!

டெஹ்ரான், ஜூன்.06; மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் ராணுவம் உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) நோக்கி நான்கு தாக்குதல் ட்ரோன்களை ஏவியது. இது சர்வதேச கடல்சார் போக்குவரத்திற்கு உடனடி அச்சுறுத்தலாக மாறியதை அடுத்து, அமெரிக்க போர் விமானங்கள் அந்த 4 ட்ரோன்களையும் நடுவானில் சுட்டு வீழ்த்தின.

ஈரானுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்க படை

இதற்குப் பதிலடியாக, ஈரானின் கோருக் (Goruk) மற்றும் கெஷ்ம் தீவில் (Qeshm Island) உள்ள ஈரானிய கடலோர கண்காணிப்பு ரேடார் தளங்கள் மீது அமெரிக்கா பாதுகாப்பு நோக்கில் அதிரடி வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

லெபனானில் ஐநா அமைதிப்படை மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்

லெபனானில் உள்ள ஐநா இடைக்கால அமைதிப்படை (UNIFIL) மீது நடத்தப்பட்ட மோர்ட்டார் தாக்குதலில் செர்பிய நாட்டைச் சேர்ந்த அமைதிப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்தனர். லெபனானுக்கு அமைதிப்படை வீரர்களை அனுப்பியுள்ள முக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதால், இந்தத் தாக்குதலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) கடும் கண்டனம் தெரிவித்து, உயிரிழந்த வீரருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது.

ட்ரம்ப் – ஈரான் இடையே ரகசிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை?

அமெரிக்க அதிபர் டொனால்டி டிரம்ப் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்,”ஈரானிடம் தற்போது 21% முதல் 22% வரையிலான ஏவுகணைகளே எஞ்சியுள்ளன. தொடர் தாக்குதல்களால் அவர்களின் ராணுவ பலம் குறைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில், அமெரிக்காவிடம் முடக்கப்பட்டுள்ள ஈரானின் 24 பில்லியன் டாலர் நிதியை விடுவித்தால் மட்டுமே இரு நாடுகளுக்கும் இடையேயான அமைதி ஒப்பந்தம் சாத்தியமாகும் என ஈரானிய உச்ச தலைவரின் ஆலோசகர் மொஹ்சென் ரெசாய் தெரிவித்துள்ளார்.

ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கைவிடவும், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் இந்த ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

லெபனான் போர் நிறுத்தம்: ஹிஸ்புல்லா மறுப்பு

அமெரிக்கா மற்றும் லெபனான் அரசு இணைந்து முன்மொழிந்த தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா (Hezbollah) ஆயுதக்குழு திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இஸ்ரேலிய ராணுவம் லெபனானில் இருந்து முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், விரிவான போர் நிறுத்தம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் ஹிஸ்புல்லா பிடிவாதம் காட்டி வருகிறது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் இந்த போர் சூழல் உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் ஈரானின் கடல்வழி முற்றுகைக்கு மத்தியில், ரஷ்யா போன்ற நாடுகள் உலக சந்தையை சமநிலைப்படுத்த முயன்று வருகின்றன. வல்லரசு நாடுகளின் தலையீட்டால் இந்த வாரம் எட்டப்படவிருந்த அமைதி ஒப்பந்தம் தற்போது மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *