Skip to content

ஈரானின் உச்ச தலைவர் கமேனி படுகொலை “அருவருப்பானது” – பிரியங்கா காந்தி கடும் கண்டனம்

டெஹ்ரான்,மார்ச்.02; ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இது ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் தலைவருக்கு எதிராக நடத்தப்பட்ட திட்டமிட்ட படுகொலை என்று அவர் சாடியுள்ளார்.

ஜனநாயக நாடுகளின் தலைவர்கள் மீது விமர்சனம்

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரியங்கா காந்தி, “ஜனநாயக உலகின் தலைவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள், ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் தலைமைத்துவத்தை குறிவைத்து படுகொலை செய்வது மற்றும் அப்பாவி மக்களை கொன்று குவிப்பது அருவருப்பானது (Despicable); இதற்கு எந்தக் காரணத்தைச் சொன்னாலும் அது கடும் கண்டனத்திற்குரியது” என்று விமர்சித்துள்ளார்.

இந்த மோதல்கள் மூலம் பல நாடுகள் தேவையின்றி போருக்குள் இழுத்துச் செல்லப்படுவது வருத்தமளிப்பதாக அவர் தெரிவித்தார்.

“கண்ணுக்குக் கண் என்பது உலகையே குருடாக்கும்”

மகாத்மா காந்தியின் அகிம்சை தத்துவத்தை நினைவுகூர்ந்த பிரியங்கா, “கண்ணுக்குக் கண் என்பது ஒட்டுமொத்த உலகையுமே குருடாக்கிவிடும் என்பதை அதிகாரத்தில் இருப்பவர்கள் உணர வேண்டும்; உலகிற்குத் இப்போது தேவை அமைதியே தவிர, தேவையற்ற போர்கள் அல்ல” என்று வலியுறுத்தினார்.

இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை

மேலும், மத்திய அரசை விமர்சித்த பிரியங்கா காந்தி, பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோருடன் நட்புறவைப் பேணி வரும் வேளையில், போரினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருக்கும் இந்திய குடிமக்களைப் பாதுகாப்பாக தாய்நாடு அழைத்து வர முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மற்ற தலைவர்களும் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் பலவீனத்தைக் காட்டுவதாக விமர்சித்து வருகின்றனர்.

இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் பதற்றம் உலக அளவில் பெரும் பொருளாதார மற்றும் அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மிக நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான ஈரானில் ஏற்பட்டுள்ள இந்தச் சூழல், அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் எரிசக்தித் தேவைகளில் சவால்களை உருவாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலையான மற்றும் அமைதி வழியிலான தீர்வை நோக்கிச் செயல்பட வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *