Skip to content

ஈரான் உச்ச தலைவர் காமேனியின் உடல் நல்லடக்கம் ஒத்திவைப்பு; லட்சக்கணக்கில் கூடும் மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது எப்படி?

டெஹ்ரான்,மார்ச்.05; மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் உடல் நல்லடக்கம் மற்றும் பிரியாவிடை நிகழ்ச்சிகள் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் 5-வது நாளை எட்டியுள்ள நிலையில் இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரியாவிடை நிகழ்ச்சி ஒத்திவைப்பு: பின்னணி என்ன?

ஈரானிய அரசு ஊடகங்களின்படி, நேற்று புதன்கிழமை மாலை டெஹ்ரானில் நடைபெறவிருந்த காமேனியின் பிரியாவிடை நிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக, எதிர்பார்க்கப்படும் மில்லியன் கணக்கான மக்களின் வருகையும், அதற்கான பாதுகாப்பு மற்றும் தளவாட ஏற்பாடுகளுமே கூறப்படுகின்றன.

டெஹ்ரானின் இஸ்லாமிய வளர்ச்சி ஒருங்கிணைப்பு கவுன்சிலின் தலைவர் மொஹ்சென் மஹ்மூதி கூறுகையில், “மக்களின் பெரும் திரளான வருகையை கருத்தில் கொண்டும், முறையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

5-வது நாளாக தீவிரமடையும் அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போர்

86 வயதான கமேனி, கடந்த வார இறுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து, சனிக்கிழமை முதல் ஈரான் மீது தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக ராணுவ மற்றும் அரசு முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.

மறுபுறம், ஈரானும் பதிலடித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்க சொத்துக்கள் மற்றும் இஸ்ரேலிய தளங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதால் பிராந்தியம் முழுவதும் போர் மேகம் சூழ்ந்துள்ளது.

கமேனியின் உடல் எங்கு அடக்கம் செய்யப்படும்?

முதற்கட்ட தகவல்களின்படி, கமேனியின் உடல் அவரது பிறந்த இடமான மஷாத் (Mashhad) நகரில் உள்ள புனிதமான இமாம் ரேசா நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. பிரியாவிடை நிகழ்ச்சிகள் மூன்று நாட்கள் நடைபெறும் என்றும், அதன் பின்னர் இறுதி ஊர்வலம் குறித்த தேதிகள் அறிவிக்கப்படும் என்றும் ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

கமேனியின் மரணம்; ஈரானின் எதிர்கால அரசியலில் மாற்றமா?

ஈரான் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையிலான இந்த நேரடி மோதல் உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. உச்ச தலைவரின் மரணம் ஈரானின் எதிர்கால அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய பதற்றமான சூழலில், போர் நிறுத்தத்திற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே தென்படுகின்றன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *