வாஷிங்டன்,மார்ச.19; அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தில் மிக முக்கிய பொறுப்பில் இருந்த தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்தின் (NCTC) இயக்குனர் ஜோ கென்ட் (Joe Kent), ஈரான் மீதான போருக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது அதிரடி முடிவு உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானால் உடனடி அச்சுறுத்தல் இல்லை: ஜோ கென்ட் குற்றச்சாட்டு
தனது பதவி விலகல் கடிதத்தில் ஜோ கென்ட் மிகக் கடுமையான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். “ஈரானால் நமது நாட்டுக்கு (அமெரிக்கா)எந்தவிதமான உடனடி அச்சுறுத்தலும் இல்லை. அப்படியிருக்கையில், இந்த தேவையற்ற போரை என்னால் மனசாட்சியுடன் ஆதரிக்க முடியாது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவில் உள்ள அதன் ஆதரவு அமைப்புகளின் அழுத்தத்தின் காரணமாகவே அமெரிக்கா இந்தப் போரைத் தொடங்கியுள்ளதாக அவர் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். ஈராக் போரின் போது பயன்படுத்தப்பட்ட அதே போன்ற தவறான தகவல்கள் தற்போதும் பரப்பப்படுவதாக அவர் எச்சரித்துள்ளார்.
டொனால்ட் டிரம்பின் பதிலடி
ஜோ கென்ட்டின் ராஜினாமா குறித்து கருத்து தெரிவித்த அதிபர் டிரம்ப், “அவர் ஒரு நல்ல மனிதர் என்று நான் நினைத்தேன், ஆனால் பாதுகாப்பில் அவர் மிகவும் பலவீனமானவர் (Weak on security). அவர் விலகியது ஒரு நல்ல விஷயம் தான்” என்று விமர்சித்துள்ளார். ஈரானால் அச்சுறுத்தல் இல்லை என்று கூறுவதை ஏற்க முடியாது எனவும் வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போரின் பின்னணி மற்றும் பாதிப்புகள்
கடந்த சில வாரங்களாகவே ஈரானுக்கும் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணிக்கும் இடையே போர் தீவிரமடைந்துள்ளது. ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) என்ற பெயரில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் ராணுவ தளங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த மோதலில் இதுவரை பல அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளதும், பில்லியன் கணக்கான டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கென்ட் பதவி விலகல்; டிரம்பின் வெளியுறவுக் கொள்கைக்கு சவால்
அமெரிக்காவின் ‘அமெரிக்கா ஃபர்ஸ்ட்’ (America First) கொள்கைக்கு எதிராக இந்தப் போர் அமைந்துள்ளதாக ஜோ கென்ட் கருதுகிறார். ஒரு மூத்த பாதுகாப்பு அதிகாரி, போர் நடந்து கொண்டிருக்கும் வேளையிலேயே நிர்வாகத்தை விமர்சித்து வெளியேறியிருப்பது டிரம்பின் வெளியுறவுக் கொள்கைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
