வாஷிங்டன்,மார்ச்.18; ஈரான் உடனான மோதல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சர்வதேச நாடுகளை அதிரவைக்கும் வகையில் ஒரு முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார். ஈரான் விவகாரத்தில் தனது ராணுவ நடவடிக்கைகளுக்கு நேட்டோ (NATO) உள்ளிட்ட கூட்டணி நாடுகளின் உதவி இனி தேவையில்லை என்று அவர் கூறியுள்ளார்.
ராணுவ வெற்றிகளே காரணம்
ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறக்க உதவி கோரிய டிரம்பின் அழைப்பை பல நாடுகள் நிராகரித்திருந்தன. இந்நிலையில், தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், “அமெரிக்கா மிகப்பெரிய ராணுவ வெற்றிகளைப் பெற்றுள்ளதால், இனி நேட்டோ நாடுகளின் உதவியோ அல்லது விருப்பமோ எங்களுக்குத் தேவையில்லை. உண்மையில் எங்களுக்கு இது ஒருபோதும் தேவைப்பட்டதில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளையும் குறிப்பிட்டு, “எங்களுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை” என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளின் தயக்கம்
ஈரான் உடனான போரில் தெளிவான வெளியேறும் திட்டம் (Exit Plan) இல்லாததாலும், அமெரிக்க கடற்படையை விட தாங்கள் சிறப்பாக எதையும் செய்துவிட முடியாது என்ற கருதுவதாலும் பல நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிடத் தயக்கம் காட்டி வருகின்றன. இதனால் அமெரிக்காவிற்கும் அதன் நீண்டகால நட்பு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பொருளாதார பாதிப்புகள்
உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கு ஹார்முஸ் நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. இந்தப் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இது உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், டிரம்ப் எடுத்துள்ள இந்த ‘தனிப்பாதை’ முடிவு உலக அரசியலில் முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ராணுவ பலம் மீது டிரம்பிற்கு அபரிமிதமான நம்பிக்கை
அமெரிக்கா தனது ராணுவ பலத்தின் மீது கொண்டுள்ள அபரிமிதமான நம்பிக்கையை டிரம்பின் இந்த அறிக்கை காட்டுகிறது. இருப்பினும், உலகளாவிய ஒரு சிக்கலைத் தீர்க்க சர்வதேசக் கூட்டமைப்பு அவசியமா அல்லது அமெரிக்காவின் தன்னிச்சையான முடிவு பலன் தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
