குவாடலஜாரா,ஜூன்.24; உலகக் கோப்பை (FIFA World Cup 2026) கால்பந்து தொடரின் குரூப் ‘கே’ (Group K) பிரிவில் நடைபெற்ற பரபரப்பான லீக் போட்டியில், கொலம்பியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் காங்கோ ஜனநாயகக் குடியரசு (DR Congo) அணியை வீழ்த்தி, நாக்-அவுட் ‘ (Round of 32) சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
மெக்சிகோ நாட்டில் உள்ள குவாடலஜாரா மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று (ஜூன் 24, புதன்) காலை நடைபெற்ற இப்போட்டியில், ஆட்டத்தின் 76-வது நிமிடத்தில் கொலம்பிய வீரர் டேனியல் முனோஸ் (Daniel Munoz) அடித்த சிறப்பான கோல் அணியின் வெற்றியை உறுதி செய்தது.
தொடக்கம் முதலே கொலம்பியா ஆதிக்கம்
போட்டியின் தொடக்கம் முதலே கொலம்பியா அணி பந்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு (Possession) அடுத்தடுத்து பல கோல் வாய்ப்புகளை உருவாக்கியது. கொலம்பியாவின் நட்சத்திர வீரர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் (James Rodriguez) தனது 10ஆவது உலகக் கோப்பை போட்டியில் களம் கண்டு சாதனை படைத்தார். ஆட்டத்தின் 11ஆவது நிமிடத்தில் அவர் அடித்த பந்தை காங்கோ கோல்கீப்பர் லியோனல் மபாசி (Lionel Mpasi) சாதுரியமாகத் தடுத்தார். அதன்பின்னர், லூயிஸ் டயஸ் (Luis Diaz) மற்றும் ஜான் ஆரியாஸ் (Jhon Arias) ஆகியோர் அடித்த ஆபத்தான கோல் முயற்சிகளையும் மபாசி தனது அபாரமான திறமையால் முறியடித்தார்.
முதல் பாதியில் மட்டுமே கொலம்பியா அணி 15 முறை கோல் அடிக்க முயற்சித்தது (Shots), அதில் 6 முயற்சிகள் இலக்கை நோக்கி (On Target) அமைந்தன. காங்கோ அணியின் கோல்கீப்பர் மபாசியின் அசாத்திய தடுப்பாட்டத்தால் முதல் பாதி ஆட்டம் 0-0 என சமனில் முடிந்தது.
முனோஸின் வெற்றி கோல் மற்றும் காங்கோவின் போராட்டம்
இரண்டாவது பாதியிலும் கொலம்பியாவின் அதிரடி தொடர்ந்தது. ஆட்டத்தின் 73ஆவது நிமிடத்தில் காங்கோ அணியின் யோவான் விசா (Yoane Wissa) கோல் அடிக்க நல்லதொரு வாய்ப்பைப் பெற்றார், ஆனால் அது கொலம்பிய அணியின் தடுப்பாட்டக்காரர்களால் தடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஆட்டத்தின் 76-வது நிமிடத்தில் பெனால்டி பகுதிக்கு வலதுபுறத்தில் இருந்து கிடைத்த பந்தை, கொலம்பியாவின் முனோஸ் மிகத் துல்லியமாக காங்கோ கோல் கம்பத்திற்குள் அனுப்பி அணியை 1-0 என முன்னிலை பெறச் செய்தார். கடைசிவரை காங்கோ அணியால் இந்த கோலை சமன் செய்ய முடியாமல் போனதால் கொலம்பியா வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
2 போட்டிகளிலும் வென்று நாக்- அவுட் சுற்றுக்குள் நுழைந்த கொலம்பியா!
இந்த வெற்றியின் மூலம் கொலம்பியா அணி ஆடிய இரண்டு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதை உறுதி செய்துள்ளது. தனது முதல் போட்டியில் உஸ்பெகிஸ்தான் அணியை 3-1 என கொலம்பியா வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
குரூப் ‘கே’ பிரிவின் மற்றொரு போட்டியில் போர்ச்சுகல் அணி உஸ்பெகிஸ்தானை 5-0 என வீழ்த்தியதால், கொலம்பியா மற்றும் போர்ச்சுகல் ஆகிய இரு அணிகளும் நாக்கவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. மறுபுறம், 1 புள்ளியுடன் இருக்கும் காங்கோ அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.
