Skip to content

எத்தனை கெஜ்ரிவால், ராகுல் வந்தால் என்ன..? தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றியை யாராலும் தடுக்க முடியாது: தமிழிசை

சென்னை,ஏப்.21; சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று (ஏப்ரல் 21, 2026) தேர்தல் பரப்புரைக்கு மத்தியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது அவர், தாங்கள் வெறும் வாக்கு சேகரிப்பிற்காக மட்டும் மக்களைச் சந்திக்கவில்லை என்று குறிப்பிட்டார். மேலும், திமுக மற்றும் எதிர்க்கட்சிக் கூட்டணி குறித்து அதிரடியான கருத்துகளை தெரிவித்தார்.

“நாங்கள் செல்லும் இடங்களில் உள்ள மக்களின் குறைகளையும், அந்தந்தப் பகுதியின் அடிப்படைப் பிரச்னைகளையும் உன்னிப்பாகக் குறித்து வருகிறோம். தேர்தலில் வெற்றி பெற்ற 100 நாட்களுக்குள், மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும்” என அவர் உறுதி அளித்தார்.

மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு

சென்னையின் பல பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்துப் பேசிய அவர், “மக்களின் தண்ணீர் பிரச்னை எனக்குத் தெரியும். இவை அனைத்தும் எங்களது ஆட்சியில் சரி செய்யப்படும். நான் பல தேர்தல்களைச் சந்தித்து அனுபவம் பெற்றவள். மயிலாப்பூர் தொகுதி மக்கள் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என விரும்புகிறேன். குறிப்பாக, மீனவப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த எங்களிடம் தனிப்பயன்பாட்டுத் திட்டங்கள் உள்ளன” என்று கூறினார்.

“திமுகவின் கவுன்டவுன் ஆரம்பித்துவிட்டது”

எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்துக் காட்டமாகப் பேசிய தமிழிசை, “தமிழ்நாட்டிற்கு எத்தனை அரவிந்த் கேஜ்ரிவால்கள் அல்லது ராகுல் காந்திகள் வந்தாலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. திமுக அரசின் தோல்விகளால் அவர்களது ஆட்சி முடிவிற்கான கவுன்டவுன் ஏற்கனவே தொடங்கிவிட்டது” எனத் தெரிவித்தார்.

மேலும், சமீபத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சர் அமித் ஷாவின் சாலை வலம் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

தமிழிசை சௌந்தரராஜன் ஒரு முறை கூட தேர்தலில் வெற்றி பெற்றதில்லை

இரண்டு முறை நாடாளுமன்ற தேர்தலிலும், மூன்று முறை சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜன், அவற்றில் ஒரு முறைகூட வென்றதில்லை. தற்போது அவர் நான்காவது முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதிலும் அவர் வெல்வது கடினம் என பல கருத்துக் கணிப்புகள் கூறியிருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *