Skip to content

என்ன சோதனைடா இது..? தமாகா களம் காணப்போகும் 5 தொகுதிகளிலும் காத்திருக்கும் “அக்னிப் பரீட்சை”..!!

சென்னை,மார்ச்.26; தமிழ்நாடு அரசியல் களம் சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. கூட்டணிகள், தொகுதிப் பங்கீடுகள் என அரசியல் கட்சிகள் மும்முரமாக இருக்கும் வேளையில், தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளும், அங்கு அவர்கள் எதிர்கொள்ளப்போகும் வேட்பாளர்களும் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமாகாவுக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகள் எவை?

கடந்த 2021 தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த தமாகாவுக்கு, இந்த முறை அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, ஒட்டன்சத்திரம், கும்பகோணம், கிள்ளியூர் ஆகியவையாகும்.

சவாலாக மாறும் ‘பலம் வாய்ந்த’ எதிராளிகள்

தமாகா களம் காணும் இந்த 5 தொகுதிகளிலும் தற்போதைய எம்எல்ஏ-க்களாக இருப்பவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. அவர்களில் மூன்று பேர் தமிழக அமைச்சர்களாகவும், இருவர் அந்தந்த தொகுதிகளில் அசைக்க முடியாத செல்வாக்கு கொண்டவர்களாகவும் உள்ளனர்.

ஈரோடு மேற்கு: இங்கு தமிழ்நாடு வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமியை எதிர்த்து தமாகா களம் காண வேண்டும்.

ராணிப்பேட்டை: கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தியை எதிர்த்துப் போட்டியிடுவது தமாகாவுக்கு பெரும் சவாலாகும்.

ஒட்டன்சத்திரம்: உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கடந்த பல தேர்தல்களாக இங்கு தோல்வியையே சந்திக்காதவர்.

கும்பகோணம்: கடந்த 30 ஆண்டுகளாக திமுகவின் கோட்டையாக விளங்கும் இந்தத் தொகுதியில் பலம் வாய்ந்த சாக்கோட்டை அன்பழகனை எதிர்கொள்ள வேண்டும்.

கிள்ளியூர்: காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் ராஜேஷ்குமார் இங்கு செல்வாக்குடன் விளங்குகிறார்.

புள்ளிவிவரங்கள் சொல்லும் உண்மை

இந்தத் தொகுதிகளின் தேர்தல் வரலாறு தமாகாவுக்கு சாதகமாக இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.

கிள்ளியூர்: அதிமுக வரலாற்றிலேயே இந்தத் தொகுதியில் இதுவரை வெற்றி பெற்றதே இல்லை. 1996-ல் தமாகாவை ஜி.கே. வாசனின் தந்தை ஜி.கே. மூப்பனார் தோற்றுவித்தபோது நடைபெற்ற தேர்தலிலும், பின்னர் 2001 தேர்தலிலும் அக்கட்சியின் டி.குமாரதாஸ் தொடர்ச்சியாக இரண்டு முறை வெற்றி பெற்றார். அதன்பின்னர் தொடர்ந்து நான்கு முறை காங்கிரஸ் தான் வென்றுள்ளது. தற்போது எம்எல்ஏவாக இருக்கும் ராஜேஸ்வர் அடுத்தடுத்து இரண்டு முறை வெற்றியை வசப்படுத்தியவர். இவர், 2021 தேர்தலில் தமாகாவின் ஜூட் தேவை சுமார் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

ஒட்டன்சத்திரம்: 1996 தொடங்கி இதுநாள் வரை தொடர்ச்சியாக 6 முறை இத்தொகுதியின் எம்எல்ஏவாக தேர்வானவர் அமைச்சர் சக்கரபாணி. இந்த ஆறு தேர்தல்களில் ஐந்தில் சக்கரபாணியிடம் அதிமுக தோல்வியைத் தழுவியுள்ளது. அதனால் தானோ என்னவோ, இம்முறை தமாகாவிடம் இத்தொகுதியை தள்ளிவிட்டது.

கும்பகோணம்: சுமார் 30 ஆண்டுகளாக திமுகவின் பிடியில் இருக்கும் தொகுதி.

அதிமுக தொண்டர்களின் அதிருப்தி ஏன்?

பலம் வாய்ந்த திமுக அமைச்சர்களை எதிர்கொள்ள தமாகாவுக்குப் பதிலாக அதிமுகவே நேரடியாக களம் இறங்கியிருக்கலாம் என்பது ஒரு தரப்பு அதிமுக தொண்டர்களின் கருத்தாக உள்ளது. தமாகாவுக்கு இந்தத் தொகுதிகளை ஒதுக்கியது திமுகவின் வெற்றி வாய்ப்பை எளிதாக்கிவிடுமோ என்ற அச்சமும் அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமாகாவுக்கு இது வாழ்வா? சாவா? போராட்டம்

ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு இந்த 5 தொகுதிகளும் ஒரு மிகப் பெரிய ‘அக்னிப்பரீட்சை’ என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. செல்வாக்கு மிக்க அமைச்சர்களையும், பல தசாப்த கால திமுக கோட்டைகளையும் தகர்த்து தமாகா வெற்றி பெறுமா அல்லது மீண்டும் சவால்களைச் சந்திக்குமா என்பது தேர்தல் முடிவுகளில்தான் தெரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *