வாக்கு திருட்டு விவகாரம் தொடர்பாக ,நாடாளுமன்ற மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும் இடையே கடும் வார்த்தைப் போர் வெடித்தது. சிறிது நேரம் கழித்து ராகுல் காந்தி அவையில் வெளியேறி, அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “நான் கேட்ட கேள்விகளுக்கு அமித் ஷா நேரடியாக பதிலளிக்கவில்லை. அவர் எந்த ஆதாரங்களையும் அளிக்கவில்லை,” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
விவாதத்தை எதிர்கொள்ள அமித்ஷா அச்சம்: ராகுல்
“நாடாளுமன்றத்தில் விவாதிக்கலாம் என்று நான் நேரடியாக சவால் விடுத்தேன். ஆனால் எனக்கு எந்த பதிலும் வரவில்லை,” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வெளிப்படையான விவாதத்தை எதிர்கொள்ள அமித் ஷா அஞ்சுகிறார் என்று அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார். “நான் கேட்ட கேள்விகளுக்கு இதன் மூலம், அமித் ஷாவின் பதில்கள் ஆதாரமற்றவை மற்றும் கேள்விகளைத் தவிர்ப்பவையாக உள்ளன என்ற கருத்தை ராகுல் முன்வைத்துள்ளார்.
அமித்ஷாவின் கைகள் நடுங்கியதைப் பார்த்தேன்: ராகுல்
“அமித்ஷாவின் கைகள் நடுங்கின. அமித் ஷா கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறார்,” என்று ராகுல் விமர்சித்துள்ளார். இது, உள்துறை அமைச்சரின் பதற்றம் மற்றும் அவரது நிலைப்பாட்டின் பலவீனத்தைக் காட்டுவதாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். ராகுல் காந்தியின் இந்தக் கருத்துகள் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையேயான அரசியல் மோதலை நாடாளுமன்றத்திலும் வெளியிலும் தீவிரப்படுத்தியுள்ளது.
எஸ்ஐஆர் குறித்து விவாதிக்க தயார்: அமித்ஷா
ராகுல் காந்தி மக்களவையிலிருந்து வெளியேறிய பின்னர் தொடர்ந்து பேசிய அமித்ஷா, எஸ்ஐஆர் தொடங்கப்பட்டதே காங்கிரஸ் ஆட்சியில் தான்; இதுதொடர்பாக மத்திய அரசு எந்தவொரு விவாதத்திற்கும் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார். அரசின் உத்தரவுப்படி தேர்தல் ஆணையம் செயல்படவில்லை; மக்களை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துகின்றன எனவும் அவர் கூறினார். வெளிநாட்டவரை எப்படி ஓட்டுபோட அனுமதிக்க முடியும்; அதை தடுக்கவே எஸ்ஐஆர் அமல்படுத்தப்பட்டுள்ளது.
“ராகுலைப் போன்று விவாதத்திற்கு அஞ்சி ஓடியவர்கள் இல்லை”
நேரு, இந்திரா, சோனியா ஆகியோர் லோக்சபாவில் பேசி இருக்கிறார்கள்; அதை நான் நேரில் பார்த்து இருக்கிறேன்; ஆனால் ராகுல் போன்று விவாதத்திற்கு பயந்து ஓடக்கூடியவர்கள் யாரும் இல்லை. திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதித்ததற்காக நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய நினைக்கின்றனர். ஓட்டு வங்கிக்காக அவரை தகுதி நீக்கம் செய்ய நோட்டீஸ் கொடுத்துள்ளது என்று அமித்ஷா விமர்சித்தார்.
