பிரபல தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 86. ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும், தயாரிப்பாளருமான சரவணன் சிறிது காலமாக வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலப் பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி சரவணன் இன்று (04.12.2025) காலை இயற்கை எய்தினார். அவரது உடல் ஏவிஎம் ஸ்டூடியோவில் உள்ள மூன்றாவது தளத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சரவணனின் மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவர் தமிழ்நாடு அரசின் கலைமாமணி மற்றும் புதுச்சேரி அரசின் சிகரம் ஆகிய விருதுகளைப் பெற்றவர். ஏவிஎம் மெய்யப்ப செட்டியாருக்குப் பிறகு அந்நிறுவனத்தை அவரது மகனான சரவணன் கவனித்து வந்தார். ஏவிஎம் நிறுவனம் கடந்த 75 ஆண்டுகளில் 175-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளது. வெள்ளை உடை, கைகட்டிக் கொண்டு பணிவோடு இருக்கும் தோற்றம், கனிவான பேச்சு என தனித்த அடையாளத்துடன், திரைத்துறையில் வலம் வந்தவர், ஏவிஎம் சரவணன். சிறு வயதில் தான் அவ்வளவாக திரைப்படம் பார்த்ததில்லை எனக்கூறிய இவர் தான், தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தயாரித்து, ரஜினி, கமல் உள்ளிட்ட உச்ச நடிகர்களின் முன்னேற்றத்திற்கு வித்திட்டவர்.
ஏவிஎம் சரவணன் காலமானார்; திரையுலகினர் அஞ்சலி
