லக்னோ,மே.16; 19ஆவது ஐபிஎல் தொடர் (IPL 2026) விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லக்னோவில் நேற்று (மே 15, வெள்ளி) நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG) அணியிடம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) தோல்வியைத் தழுவியது. இந்தத் தோல்வி சிஎஸ்கே ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியதோடு, அணியின் பிளே-ஆஃப் (Playoffs) வாய்ப்பையும் சற்று கடினமாக்கியுள்ளது.
இடியாப்பச் சிக்கலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
தற்போது 12 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகளுடன் இருக்கும் சென்னை அணி, பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை அணியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) மனம் திறந்து பேசியுள்ளார்.
பந்துவீச்சாளர்களுக்கு மோசமான நாள்!
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கார்த்திக்கின் அதிரடியான 71 ரன்கள் மற்றும் ஷிவம் துபே, பிரசாந்த் வீர் ஆகியோரின் பங்களிப்பால் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இந்த ஸ்கோர் போதுமானது என்றே கருதப்பட்டது.
இருப்பினும், லக்னோ அணியின் மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடி சென்னை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். இதன் காரணமாக லக்னோ அணி வெறும் 16.4 ஓவர்களில் இலக்கை எளிதாக எட்டிப் பிடித்தது.
போட்டிக்குப் பிறகு பேசிய ருதுராஜ் கெய்க்வாட், “இன்று எங்களுடைய பந்துவீச்சுக்கு ஒரு மோசமான நாளாக அமைந்துவிட்டது (Bowling had an off-day today). திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்த தவறிவிட்டோம். ஆனால், லக்னோ பேட்ஸ்மேன்கள் அசாதாரணமாக விளையாடினர் என்பதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்” என்று நேர்மையாகக் குறிப்பிட்டார்.
ருதுராஜ் கொடுத்த ‘சிம்பிள்’ மெசேஜ்
தொடர் தோல்விகளால் ஏற்கனவே பிளே-ஆஃப் ரேசில் இருந்து வெளியேறிய லக்னோ அணி, சென்னை அணியின் பிளே-ஆஃப் கனவுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது. இதனால் சென்னை ரசிகர்கள் மற்றும் வீரர்கள் மத்தியில் ஒருவித பதற்றம் நிலவுகிறது. ஆனால், கேப்டன் ருதுராஜ் தனது சக வீரர்களுக்கு மிகவும் நிதானமான ஒரு செய்தியை அனுப்பியுள்ளார்.
பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பு குறித்துப் பேசிய அவர், “இது மிகவும் எளிமையானது (It is simple), இதில் குழப்பிக்கொள்ள எதுவும் இல்லை. நாம் கவலைப்படத் தேவையில்லை. அடுத்த போட்டிகளில் நாம் சிறப்பாகச் செயல்படுவதை உறுதி செய்து, ஆட்டத்தின் போக்கை நமக்குச் சாதகமாக மாற்ற வேண்டும், அவ்வளவுதான்” என்று அணியினரைத் தேற்றும் விதமாகப் பேசினார்.
அடுத்தகட்ட திட்டம் என்ன?
சென்னை அணிக்கு இன்னும் இரண்டு லீக் போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன. “எங்களுடைய முதல் சவால் சென்னைக்குத் திரும்புவதுதான். அங்குச் சென்று நாம் எந்தெந்தப் பகுதிகளில் முன்னேற வேண்டுமோ, அதைச் செய்ய வேண்டும். மீதமுள்ள போட்டிகளில் ஆடுகளத்தின் தன்மைகளைச் சரியாகக் கணித்து அதற்கு ஏற்றவாறு விளையாட வேண்டும்” என்று ருதுராஜ் கூறினார்.
மேலும், அணியின் பேட்டிங் வரிசை தற்பொழுது ஃபார்முக்கு வந்திருப்பது தங்களுக்கு நம்பிக்கையளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். மறுபுறம், லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேசுகையில், தங்களுக்குப் பிளே-ஆஃப் வாய்ப்பு இல்லாவிட்டாலும், இந்த வெற்றி பெருமையளிப்பதாகக் கூறினார். மேலும், அணியில் அதிகப்படியான குழப்பமான சிந்தனைகள் (Too many thought-process) மட்டுமே இந்த சீசனில் தங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியதாக அவர் ஒப்புக்கொண்டார்.
தோல்வியிலிருந்து விடுபடுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்த இரண்டு போட்டிகளும் வாழ்வா-சாவா போராட்டமே. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் இந்த நேர்மறையான மற்றும் எளிமையான அணுகுமுறை அணியினரின் அழுத்தத்தைக் குறைக்கும் என நம்பப்படுகிறது. ‘ஐந்து முறை சாம்பியன்’ என்ற பெருமையைக் கொண்டுள்ள சிஎஸ்கே, இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீண்டு வந்து மீண்டும் பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
