Skip to content

கட்டணத்தை திருப்பித் தரும் இண்டிகோ; பயணிகளுக்கு பல வசதிகள்

டிசம்பர் 5ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட அனைத்து விமானங்களுக்கான கட்டணத் தொகையும் பயணிகளுக்குத் திருப்பித் தரப்படும் என்று இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. பல்வேறு பிரச்னைகளால் நாடு முழுவதும் இண்டிகோ நிறுவனத்தின் சுமார் 600 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சென்னை, கோவை, பெங்களூரு, மும்பை, டெல்லி, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் விமானநிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உணவின்றியும், உறங்க இடமின்றியும் அவர்கள் பரிதவித்து வருகின்றனர். பல விமானநிலையங்களில் பயணிகள் அங்கேயே உறங்கும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. நான்காவது நாளாக நீடித்துவரும் பிரச்னை மேலும் சில நாட்களுக்கு தொடரும் எனக் கூறப்படுகிறது. இதுபோன்ற சூழலில், பிரச்னைகளுக்குத் தீர்வுகாண இண்டிகோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி டிசம்பர் 5ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட அனைத்து விமானங்களுக்குமான கட்டணம் முழுவதுமாக திருப்பித் தரப்படும் என்று இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. தொகை பயணகளின் கணக்கிற்கு தானாகவே திரும்பி வந்துவிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விமானநிலையங்களில் பரிதவிக்கும் பயணிகளின் சிரமத்தை குறைக்க ஆயிரக்கணக்கான அறைகள், தரைவழிப் போக்குவரத்து ஏற்பாடுகள், விமானநிலையங்களில் உணவு மற்றும் சிற்றுண்டி வசதிகள், மூத்த குடிமக்களுக்கு ஓய்வறைகள் போன்ற ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இண்டிகோ விமான நிறுவனப் பிரச்னைக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுவது விமானிகள் பற்றாக்குறை. நவம்பர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்த விமானப் பணியாளர்களின் பணி நேர வரம்பு விதிகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட சவால்கள் மற்றும் திட்டமிடல் குறைபாடுகளே பிரச்னைக்கு முக்கிய காரணங்களாகும் எனக் கூறப்படுகிறது. இதுபோன்ற சூழலில், விமான நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகளை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் திரும்பப் பெற்றுள்ளது. விமானிகளுக்கு கூடுதல் ஓய்வு நேரம், 2 நாட்கள் கட்டாய விடுப்பு உள்ளிட்ட பல்வேறு விதிகளால் இண்டிகோ விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதை அடுத்து, புதிய விதிகள் திரும்பப் பெறப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *