புதுச்சேரி,மார்ச்.27; சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு போதிய இடங்கள் ஒதுக்கப்படாததால், அக்கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துவிட்டது.
இருப்பினும், தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் பரப்புரையில் ஈடுபடும் என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
கமல்ஹாசனின் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி; நெட்டிசன்கள் கடும் விமர்சனம்
கமல்ஹாசனின் இந்த அதிரடி முடிவு அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கமல்ஹாசனை சமூகவலைதளவாசிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தேர்தலில் போட்டியிடுவதில்லை என தான் எடுத்த முடிவை கடமை என்று கமல்ஹாசன் கூறியிருந்தார். ஆனால், இது தியாகம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வர்ணித்தார்.
இதுபோன்ற சூழலில், கமல்ஹாசனின் முடிவு குறித்து பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் முன்வைத்துள்ள விமர்சனங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்தியா கூட்டணியில் பிளவு: வானதி சீனிவாசன் விமர்சனம்
புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ (INDIA) கூட்டணி என்பது பெயரளவில் மட்டுமே இருப்பதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக, புதுச்சேரியில் ஆறு தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் திமுக தனித்தனியாகப் போட்டியிடுவதைச் சுட்டிக்காட்டிய அவர், ஒரு சிறிய மாநிலத்தில் கூட ஒற்றுமையாக இருக்க முடியாதவர்களால் எப்படி நாட்டை வழிநடத்த முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
கமல்ஹாசன் செய்தது தியாகமா? துரோகமா?
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சமீபகாலமாக எடுத்து வரும் அரசியல் முடிவுகள் குறித்துப் பேசிய வானதி சீனிவாசன், “கமல்ஹாசன் செய்தது தியாகம் அல்ல, அது தொண்டர்களுக்குச் செய்த துரோகம்” என்று கடுமையாகச் சாடினார்.
தி.மு.க கொடுத்த ஒரு குறிப்பிட்ட வேலையை (Assignment) கமல்ஹாசன் முடித்துவிட்டார்; நம்பி வந்த தொண்டர்களை அவர் நடுரோட்டில் நிற்க வைத்துள்ளார்; இதனை ஒரு தியாகமாகச் சித்தரிப்பது மக்களை ஏமாற்றும் செயல் என்றும் வானதி சீனிவாசம் விமர்சித்தார்.
2026 தேர்தல்; பா.ஜ.க-வின் இலக்கு
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் குறித்துப் பேசிய அவர், வரும் தேர்தலில் பா.ஜ.க மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். “இந்த முறை இரட்டை இலக்க எண்ணிக்கையில் (Double Digits) பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் சட்டப்பேரவைக்குள் நுழைவது உறுதி” என்று அவர் கூறினார்.
மேலும், கோயம்புத்தூர் வடக்கு தொகுதியில் தான் போட்டியிடுவது குறித்தும், அண்ணாமலை போட்டியிடுவது பற்றியும் கட்சித் தலைமை உரிய நேரத்தில் முடிவெடுக்கும் என்று வானதி சீனிவாசன் தெளிவுபடுத்தினார்.
கமல் முடிவு பற்றிய வானதியின் கருத்துகளால் விவாதம்
தமிழ்நாடு அரசியலில் கமல்ஹாசனின் நகர்வுகள் ஒருபுறம் விவாதிக்கப்பட்டாலும், வானதி சீனிவாசனின் இந்த நேரடித் தாக்குதல் அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. புதுச்சேரியில் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணிக்கு இடையிலான ‘நட்பு
ரீதியான போட்டி’ தங்களுக்குச் சாதகமாக அமையும் என்றும் பா.ஜ.க உறுதியாக நம்புகிறது.
