சென்னை,மார்ச்.19; திரைத்துறையில் கொடிகட்டிப் பறந்தபோதே அரசியலில் காலடி எடுத்து வைத்தவர், நடிகர் விஜய். அவரது கடைசி படம் எனக் கூறப்படும் ஜனநாயகன் பொங்கல் திருநாளை முன்னிட்டு கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், தணிக்கை வாரிய பிரச்னையில் சிக்கிய அந்தப்படம் இதுவரை வெள்ளித்திரையை எட்டவில்லை.
ஜனநாயகன், கரூர் விவகாரம் என அடுத்தடுத்து பிரச்னை
இதனிடையே, கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான துயரசம் சம்பவம் தொடர்பாக, விஜய்யிடம் நடத்தப்பட்டு வரும் சிபிஐ விசாரணையாலும் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார்.
இதுபோதாதென்று அவரது மனைவி சங்கீதா தொடுத்த மணவிலக்கு வழக்கு, விஜய்யை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.
இதுபோன்ற சூழலில், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், தவெக தனித்துப் போட்டியிடும் என்றும் விஜய் அறிவித்துள்ளார்.
60 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தயார்; எஞ்சிய தொகுதிகளுக்கு தேர்வு
ஏற்கனவே, 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டதாக கூறப்படும் நிலையில், எஞ்சிய 174 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தவெகவின் முதலமைச்சர் வேட்பாளராக விஜய் அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்தத் தேர்தலில் அவருடைய வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பெரம்பூர், திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் போட்டி?
பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் அவர் போட்டியிடுவார் என்று பேசப்படுகிறது.இதனை உறுதி செய்யும் வகையில், பெரம்பூர் தொகுதியில் தவெக தேர்தல் பணிமனை குளு குளு ஏசி வசதியுடன் அமைக்கப்பட்டும் வருகிறது.
இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும், வேட்புமனு தாக்கலின்போது தங்களது அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களையும், தமது மனைவியின் பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்கனையும் தாக்கல் செய்வது கட்டாயமாகிறது.
மணவிலக்கு கோரி மனைவி தொடுத்துள்ள வழக்கால் தலைவலி
அந்த வகையில், தற்போது மணவிலக்கு கோரி மனுதாக்கல் செய்திருந்தாலும், மணவிலக்கு பெறும் வரை விஜய்யின் மனைவியாகவே அவர் கருதப்படுவார்.
இந்த வழக்கு விசாரணையும் ஏப்ரல் 20ஆம் தேதிதான், அதாவது தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன்புதான் வருகிறது.
எனவே, வேட்புமனுத் தாக்கலின்போது நடிகர் விஜய், அவரது மனைவி சங்கீதாவின் சொத்து மதிப்பையும் காண்பிக்க வேண்டும்.
தனது மற்றும் மனைவி பெயரில் உள்ள சொத்துகளை குறிப்பிடுவதில் சிக்கல்
அவ்வாறு அவர் காட்டும் சொத்து மதிப்புக்கு சங்கீதா எதுவும் ஆட்சேபம் தெரிவித்தால், வேட்புமனுவை ஏற்பதிலும் சிக்கல் ஏற்படும்.
அந்த வகையில், நடிகர் விஜய் தேர்தலில் போட்டியிடுவதிலும் சிக்கல் நீடிக்கிறது. மற்றொரு புறம் விஜய்யை எதிர்த்து வலுவான வேட்பாளரை களமிறக்கவும் திமுக திட்டமிட்டு வருகிறது.
