பெங்களூரு,ஜூன்.04; கர்நாடக அரசியலில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தலைமை மாற்றம் இறுதியாக அரங்கேறியுள்ளது. அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டி.கே. சிவக்குமார் (D.K. Shivakumar) முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். நேற்று (ஜூன் 3, 2026) மாலை பெங்களூருவில் உள்ள லோக் பவனின் கண்ணாடி மாளிகையில் (Glass House) இந்த பிரமாண்ட விழா நடைபெற்றது.
புதிய முதலமைச்சருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஆளுநர்
கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், புதிய முதலமைச்சர் டி.கே. சிவகுமாருக்கு பதவிப்பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 64 வயதான டி.கே. சிவக்குமார், தனது ஆன்மீக குருவான மறைந்த ‘கங்காதர அஜ்ஜய்யா’வின் பெயரால் பதவியேற்றுக் கொண்டார்.
முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் மேலிடத்தின் அறிவுறுத்தலின்படி இந்த அதிகாரப் பகிர்வு சுமூகமாக நடந்து முடிந்துள்ளது. இதன் மூலம் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த அரசியல் நகர்வுகள் நிறைவுக்கு வந்துள்ளன.
துணை முதலமைச்சர் மற்றும் 13 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
டி.கே. சிவகுமாருடன் இணைந்து, சித்தராமையா அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த மூத்த காங்கிரஸ் தலைவர் ஜி. பரமேஸ்வரா கர்நாடகாவின் புதிய துணை முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.
முதற்கட்டமாக, புதிய அமைச்சரவையில் பின்வரும் 13 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர்:
ஜி. பரமேஸ்வரா (துணை முதலமைச்சர்), கே.எச். முனியப்பா, கே.ஜே. ஜார்ஜ், எம்.பி. பாட்டீல், ராமலிங்க ரெட்டி, சதீஷ் ஜார்கிஹோலி, கிருஷ்ண பைரே கவுடா, பிரியங்க் கார்கே (காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன்), யு.டி. காதர் (முன்னாள் சபாநாயகர்), ஈஸ்வர் கந்த்ரே, யத்தீந்திர சித்தராமையா (முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவின் மகன்), பைரதி சுரேஷ், சரண் பிரகாஷ் பாட்டீல்.
வரவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலுக்குப் பிறகு இந்த அமைச்சரவை மேலும் விரிவாக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விழாவில் பங்கேற்ற முக்கிய தலைவர்கள்
இந்த பதவியேற்பு விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு மற்றும் கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, பல்வேறு மதத் தலைவர்கள், விவசாயிகள், மாணவர்கள், கன்னட அமைப்பினர் மற்றும் டி.கே. சிவக்குமாரின் சொந்த ஊரான கனகபுராவைச் சேர்ந்த பொதுமக்கள் பெருமளவில் திரண்டு வந்து வாழ்த்தினர். பிரதமர் நரேந்திர மோடியும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் புதிய முதலமைச்சருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் முதல் அறிவிப்பு: “யுவ யுகா” திட்டம்
பதவியேற்பு விழா முடிந்தவுடன் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், மாநில இளைஞர்களுக்கான நல்வாழ்வு திட்டங்களை உள்ளடக்கிய “யுவ யுகா” (Yuva Yuga) என்ற புதிய சலுகைத் திட்டங்களை அறிவித்தார். மேலும், தனது தலைமையிலான அரசு கர்நாடக மக்களின் நலனுக்காகவும், அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து பாடுபடும் என்று உறுதியளித்தார்.
காங்கிரசின் ஆபத்பாந்தவனாக செயல்பட்டவர் டி.கே.சிவகுமார்!
கனகபுராவின் பாறை (‘Kanakapurada Bande’) என்று அழைக்கப்படும் டி.கே. சிவக்குமார், கடந்த நான்கு தசாப்தங்களாக காங்கிரஸின் இக்கட்டான சூழ்நிலைகளில் ‘அரசியல் ஆபத்பாந்தவனாக’ செயல்பட்டவர். 8 முறை சட்டமன்ற உறுப்பினராக வென்ற இவருக்கு, தற்போது கிடைத்துள்ள முதலமைச்சர் பதவி அவரது அரசியல் உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.
வரும் 2028 சட்டமன்றத் தேர்தல் மற்றும் வொக்கலிகா சமூக வாக்குகளை இலக்காகக் கொண்டு காங்கிரஸ் இந்த பெரிய மாற்றத்தைச் செய்துள்ளது. புதிய அமைச்சரவை கர்நாடகாவை அடுத்தகட்ட வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
