Skip to content

கல்லாப்பெட்டி கூட்டணி கலகலத்து போய் நிற்கிறது: நெல்லை தேர்தல் களத்தில் திமுகவை வறுத்தெடுத்த விஜய்!

திருநெல்வேலி,ஏப்.08; தமிழ்நாட்டில் கொளுத்தும் கோடை வெயிலைவிட சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் அனல் தகிக்கிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என ஒருவருக்கொருவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், திருநெல்வேலியில் இன்று (ஏப்ரல் 8, புதன்) நடைபெற்ற பிரமாண்ட தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்துகொண்டு ஆவேசமாக உரையாற்றினார். திமுக ஆட்சியை “ஊழலில் ஊறிப்போன ஆட்சி” என்று விமர்சித்த அவர், ஆளுங்கட்சியின் கூட்டணி வியூகங்களை கடுமையாகக் கேலி செய்தார்.

திமுக கூட்டணியை வெளுத்து வாங்கிய விஜய்

நெல்லை கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜய், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை “கல்லாப்பெட்டி கூட்டணி” என்று விமர்சித்தார். “இந்த கூட்டணி தற்போது கலகலத்து போய் நிற்கிறது; அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை, ஒருவருக்கொருவர் ஓட்டுப் போடமாட்டார்கள் போல தெரிகிறது; கோடிகளைக் கொடுத்து சில கட்சிகளைத் தன் பாக்கெட்டுக்குள் திமுக வைத்துள்ளது; ஆனால் உண்மையான தொண்டர்களும், சிறுபான்மை மக்களும் நமது பக்கமே நிற்கிறார்கள்” என்று அவர் கூறினார்.

“234 தொகுதியிலும் விஜய்தான் வேட்பாளர்”

தனது கட்சியின் வேட்பாளர்கள் சாதாரண பின்புலத்திலிருந்து வந்தவர்கள் என்பதை சுட்டிக்காட்டிய விஜய், “நமது வேட்பாளர்கள் டாட்டா, பிர்லா கிடையாது; அவர்கள் உங்கள் வீட்டுப் பிள்ளைகள்; 234 தொகுதிகளிலும் இந்த விஜய்தான் வேட்பாளராகப் போட்டியிடுகிறான் என்று நினைத்து வாக்களியுங்கள்; இதுவரை யாரோ யாருக்கோ ஓட்டுப் போட்டீர்கள், இந்த முறை உங்கள் வீட்டுப் பிள்ளைக்காக, உங்களுக்கே ஓட்டுப் போடுவது போல் விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள்” என வேண்டுகோள் விடுத்தார்.

ஊழல் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து விமர்சனம்

திமுக ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டிய விஜய், “மணல் திருட்டு, மலை திருட்டு என இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. நாங்குநேரி சம்பவம் போன்ற வன்முறைகள் போதைப்பொருட்களால் அரங்கேறுகின்றன. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத இந்த ஆட்சி, எந்த முகத்தை வைத்துக் கொண்டு மக்களிடம் ஓட்டு கேட்கிறது?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், தான் ஆட்சிக்கு வந்தால் மக்கள் பணத்தில் ஒரு பைசாவைக் கூட எடுக்க மாட்டேன் என்று அவர் உறுதி அளித்தார்.

இது மாற்றத்திற்கான தேர்தல் என விஜய் பேச்சு

“இது வெறும் தேர்தல் அல்ல, இது ஒரு எமோஷன் (Emotion). என்னை மக்களிடம் இருந்து யாராலும் பிரிக்க முடியாது” என்று முழங்கிய விஜய், இந்தத் தேர்தல் திமுக-விற்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்குமான (TVK vs DMK) நேரடிப் போட்டி என மீண்டும் குறிப்பிட்டார். வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களித்து ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று கூறி விஜய் தனது உரையை நிறைவு செய்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *