சென்னை,மார்ச்.25; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி தனது தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், வரும் மார்ச் 30-ஆம் தேதி தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் அக்கட்சியின் வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.
234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி
தமிழ்நாடு அரசியலில் திராவிட மற்றும் தேசிய கட்சிகளுக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்தி வரும் நாம் தமிழர் கட்சி, இந்த முறையும் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில், 117 ஆண்கள் மற்றும் 117 பெண்கள் என அனைத்து வேட்பாளர்களையும் சீமான் ஒரே அறிமுகப்படுத்தி வைத்தார்.
மார்ச் 30: ஒரே நாளில் மனுத்தாக்கல்
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அட்டவணையின்படி, மார்ச் 30-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. அன்றைய தினமே தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தங்களது மனுக்களைத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளனர். கட்சியின் வலிமையையும், ஒருமித்த செயல்பாட்டையும் வெளிப்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
சீமானின் வியூகம் மற்றும் பரப்புரை
வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு, சீமான் தமிழ்நாடு முழுவதும் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு தீவிரப் பரப்புரையில் ஈடுபட உள்ளார். “ஆட்சி மாற்றமல்ல, அரசியல் மாற்றம்” என்ற முழக்கத்துடன், விவசாயம், கல்வி, மருத்துவம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் “அரசு ஆளுமை வரைவை” முன்வைத்து மக்கள் மத்தியில் வாக்கு சேகரிக்க அக்கட்சி தயாராகி வருகிறது.
பெரிய கட்சிகளுக்கு இணையாக வேகம் காட்டும் நாதக!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மற்ற பெரிய கூட்டணிகளுக்கு இணையாக, களப்பணிகளில் நாம் தமிழர் கட்சி வேகம் காட்டி வருகிறது. மார்ச் 30-ல் நடைபெறவுள்ள இந்த ஒட்டுமொத்த மனுத்தாக்கல் நிகழ்வு, அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. வரவிருக்கும் தேர்தல் முடிவுகள் தமிழ்நாடு அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
