Skip to content

காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் இடைநீக்கம்: தவெக-வுக்கு ஆதரவளித்ததை விமர்சித்ததால் நடவடிக்கை!

சென்னை,மே.08; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் திடீரென விலகி, தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்தது.

இருப்பினும், மேலும் 5 உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காததால், தவெக ஆட்சியமைக்க முடியாமல் திணறி வருகிறது.

தவெக-வுக்கு காங்கிரஸ் ஆதரவு; காங். பொதுச்செயலர் விமர்சனம்

இதனிடையே, காங்கிரஸ் கட்சி தவெக-வுக்கு ஆதரவளித்திருப்பதை திமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

தவெக-வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான காங்கிரஸின் முடிவு குறித்து பொதுவெளியில், அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அலிம் அல் புஹாரி கடுமையான விமர்சனங்களை தெரிவித்தார்.

அலிம் அல் புஹாரி காங்கிரசிலிருந்து இடைநீக்கம்

இதன் எதிரொலியாக, அலிம் அல் புஹாரியை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், தொடர் எச்சரிக்கைகளுக்குப் பிறகும் கட்சியின் ஒழுக்க நெறிமுறைகள் மற்றும் அமைப்பு விதிகளை மீறி அலிம் அல் புஹாரி செயல்பட்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற நிர்வாகிகளுக்கு ஒரு எச்சரிக்கை

எனவே, இது தொடர்பான விசாரணை நடைபெற உள்ளதாகவும், அடுத்த உத்தரவு வரும் வரை காங்கிரஸ் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அலிம் அல் புஹாரி இடைநீக்கம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த அதிரடி நடவடிக்கை, மற்ற நிர்வாகிகளுக்கும் ஒரு எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *