காரைக்குடி,மார்ச்.25; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் அனல் பறந்துவரும் வேளையில், காரைக்குடி தொகுதியில் தனியார் தொலைக்காட்சி சார்பில் ஒரு விவாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அரசியல் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வன்முறை தொடர்பாக திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் என மொத்தம் 137 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
காரைக்குடி மகர்நோன்பு திடலில் பரபரப்பு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மகர்நோன்பு திடலில் நடைபெற்ற இந்த விவாத நிகழ்ச்சியில் திமுக சார்பில் மாவட்ட துணைச் செயலாளரும் திருப்புவனம் பேரூராட்சித் தலைவருமான சேங்கைமாறன், அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ உமாதேவன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் ஆகியோர் பங்கேற்றனர்.
மோதல் வெடித்தது எப்படி?
விவாதத்தின் போது திமுக மற்றும் அதிமுகவினர் தங்கள் ஆட்சிக் காலத்தில் செய்த திட்டங்கள் குறித்து வாதிட்டனர். அப்போது நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் பேசிய சில கருத்துகளுக்கு திமுக கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தச் சூழலில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.கே. உமாதேவன், நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதில், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் மூன்று பேர் காயமடைந்தனர்.
137 பேர் மீது வழக்குப் பதிவு
இந்த மோதல் சம்பவம் தொடர்பாக காரைக்குடி தெற்கு போலீசார் இருதரப்பு புகார்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சி தரப்பு புகார்: இளங்கோ என்பவர் அளித்த புகாரின் பேரில், திமுக மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன், காரைக்குடி துணை மேயர் குணசேகரன், மதிமுக மாவட்டச் செயலாளர் பசும்பொன் மனோகரன் உள்ளிட்ட 16 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
திமுக தரப்பு புகார்: துணை மேயர் குணசேகரன் அளித்த புகாரின் பேரில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.கே. உமாதேவன், நகரச் செயலாளர் மெய்யப்பன் மற்றும் பாஜக, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உட்பட 121 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விவாத நிகழ்ச்சிகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்
தேர்தல் நெருங்கும் வேளையில் மக்கள் முன்னிலையில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகள் ஆரோக்கியமாக அமைய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், இதுபோன்ற மோதல் சம்பவங்கள் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை கேள்விக்குறியாக்குவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். காரைக்குடியில் ஏற்பட்டுள்ள இந்த பதற்றத்தைத் தணிக்க போலீசார் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
