Skip to content

கால் நூற்றாண்டாக அதிமுக வசமிருக்கும் கிணத்துக்கடவு தொகுதி; தன் வசப்படுத்த முட்டிமோதும் திமுக!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்றான கிணத்துக்கடவு தொகுதியில் தொடர்ந்து 25 ஆண்டுகளாக அதிமுக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

1967 முதல் இத்தொகுதியில் 13 முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் திமுக நான்கு முறையும், அதிமுக 9 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

கிணத்துக் கடவு தொகுதியில் மதுக்கரை நகராட்சி, கிணத்துக்கடவு, வெள்ளலூர், எட்டிமடை, திருமலையாம்பாளையம், ஒத்தக்கால் மண்டபம், செட்டிபாளையம் ஆகிய 6 பேரூராட்சிகளும், சொக்கனூர், பொட்டையாண்டிபுரம், வடபுதூர், சோலவம்பாளையம், குதிரைபாளையம், முத்தூர் ஆகிய 7 கிராம ஊராட்சிகளும் உள்ளன.

கோவை மாநகராட்சியின் வார்டுகள் 94 முதல் 100 வரை, குறிச்சி மற்றும் சிட்கோ தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதிகளும் கிணத்துக்கடவு தொகுதியில் அடங்கும்.

கல்குவாரி, விவசாயம், கயிறு சார்ந்த தொழில்கள் பிரதானம்

கல்குவாரி, விவசாயம் மற்றும் கயிறு சார்ந்த தொழில்கள் பிரதானமாக இருக்கின்றன. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் உள்ளன. தக்காளி மற்றும் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெறுகின்றன.

ஜூலை முதல் நவம்பர் வரையிலான பருவத்தில், தினமும் சுமார் 250 டன் தக்காளி அறுவடை செய்யப்பட்டு எர்ணாகுளம், கோழிக்கோடு மற்றும் திருச்சி உள்ளிட்ட சந்தைகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

சட்டவிரோத கல்குவாரிகளால் பெரும் பிரச்னை

சட்டவிரோத குவாரிகளால், கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் படுபாதாளத்துக்கு சென்றுள்ளது. இதனால் காய்கறி விவசாயம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

“குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு கனிம வளம் எடுப்பதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன் விவசாயமும் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கனரக லாரிகளால் கிராமச் சாலைகள் நாள்தோறும் சேதம்

வெடிபொருட்களை அதிகம் பயன்படுத்துவது, ஆழமான குவாரிகளுக்குள் தண்ணீர் வடிந்து, பாசனத்தைப் பாதிப்பது, கற்களை ஏற்றிச் செல்லும் கனரக லாரிகளால் கிராமச் சாலைகள் நாள்தோறும் சேதமடைவது என பல்வேறு பாதிப்புகளை சந்திக்கிறோம் எனக் கூறுகின்றனர் மக்கள். சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் மற்றொரு பிரச்னையாக நீடிக்கிறது.

வெள்ளலூர் குப்பைக் கிடங்கால் துர்நாற்றம், நிலத்தடி நீர் மாசுபாடு

ஆழியாறு பகுதியிலிருந்து வரும் ஒருங்கிணைந்த குடிநீர் விநியோகத் திட்டம், 200-க்கும் மேற்பட்ட கிராமங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை. நகர்ப்புறப் பகுதியில், கோவை மாநகராட்சியின் சுமார் 1,100 டன் கழிவுகள் தினமும் பதப்படுத்தப்படும் வெள்ளலூர் குப்பைக் கிடங்கிலிருந்து வரும் துர்நாற்றம் மற்றும் அங்கு ஏற்பட்டுள்ள நிலத்தடி நீர் மாசுபாடு பெரிய பிரச்னையாக உள்ளன.

தேங்கியுள்ள கழிவுகளை அகற்றி, சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைச்சூழலை மேம்படுத்த வேண்டும் என பல தேர்தல்களில் வலியுறுத்தினாலும், கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனக் கூறுகின்றனர், பொதுமக்கள். கிணத்துக்கடவில் உள்ள புதிய வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம் 10 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்படாமல் உள்ளது.

புதிய வட்டாட்சியர் அலுவலகம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?

இட நெருக்கடி காரணமாக வட்டாட்சியர் அலுவலகம் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் தொடர்ந்து இயங்கி வருகிறது. அந்த கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும், மண்பாண்டத் தொழிலுக்கு ஏற்ற களிமண்ணை வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன.

அதிமுகவின் எஸ் தாமோதரன் 5ஆவது முறையாக போட்டி

அதிமுகவின் கோட்டையான கிணத்துக்கடவு தொகுதியில் அக்கட்சி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ். தாமோதரன் 2001, 2006, 2011 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறை வெற்றி பெற்றுள்ளார். 2016-ம் ஆண்டில் சண்முகம் வெற்றிபெற்றார்.
தற்போதைய தேர்தலில், அதிமுகவின் எஸ்.தாமோதரன் மீண்டும் களம் காண்கிறார். அவரை எதிர்த்து திமுகவின் எஸ்.சபரிகார்த்திகேயன் போட்டியிடுகிறார்.

கிணத்துக்கடவு தொகுதியை கைப்பற்ற மெனக்கெடும் திமுக

எப்படியாவது இத்தொகுதியைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் திமுக களம் இறங்கி உள்ளது. இரு கட்சிகளுக்குமான போட்டி கடுமையாக இருக்கிறது. நாம் தமிழர் கட்சியில் பானுப்பிரியா, தமிழக வெற்றிக்கழகத்தில் கே.விக்னேஷ் ஆகியோருக்கு கிடைக்கும் வாக்குகளும் அதிமுக, திமுகவின் வெற்றி, தோல்விக்கு காரணமாக இருக்கும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

கிணத்துக்கடவு தொகுதியில் மொத்தம் 3,05,878 வாக்காளர்கள் உள்ளனர். பிற தொகுதிகளைப் போலவே இங்கும் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்களே அதிகம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *