Skip to content

கிள்ளியூர்; கோட்டையைத் தக்க வைக்க காங்கிரஸ் முனைப்பு! தவெக கணிசமான வாக்குகளைப் பிரிக்குமா? விறுவிறுப்படையும் தேர்தல் களம்!

கிள்ளியூர் தொகுதி (எண் – 234)

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிள்ளியூர் தொகுதி, இதுவரை 15 முறை தேர்தலைச் சந்தித்துள்ளது.

இங்கு அதிகபட்சமாக காங்கிரஸ் 8 முறையும், ஜனதா 3 முறையும், தமாகா இரு முறையும், ஜனதா தளம் மற்றும் சுயேச்சை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.

குமரித் தந்தை மார்ஷல் நேசமணி ஒரு முறை வென்ற தொகுதி

குமரி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டத்திற்கு தலைமையேற்றவரும் குமரித் தந்தை என்று அழைக்கப்படுபவருமான மார்ஷல் நேசமணி, கிள்ளியூர் தொகுதியிலிருந்து ஒருமுறை எம்எல்ஏவாக தேர்வானார்.

இத்தொகுதியில் நாடார், கிறிஸ்தவ நாடார் சமூகத்தினர் சுமார் 78 சதவீதம் அளவுக்கு உள்ளனர். இவர்கள் தவிர மீனவர்கள், ஆசாரி, நாயர் சமூக மக்களும் உள்ளனர்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் வாய்ப்பு

திமுக கூட்டணியில் காங்கிரஸின் தற்போதைய எம்எல்ஏ செ.ராஜேஷ் குமாருக்கு தான் மீண்டும் சீட் கிடைக்கும் எனப் பேசப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் த.மா.கா-வுக்கு ஒதுக்கப்பட்டால், முன்னாள் எம்எல்ஏ ஜான் ஜேக்கப்பின் மகன் நிவின் சைமனுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

பாஜகவில் மீனவரணி மாநிலத் தலைவர் சீமா, மாநிலச் செயற்குழு உறுப்பினர் தர்மராஜ், மாவட்ட விருந்தோம்பல் பிரிவுத் தலைவர் தாணுமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் சந்திரகுமார் ஆகியோர் சீட் பெற முட்டி மோதுகின்றனர்.

அதிமுகவிலும் போட்டா போட்டி

அதிமுக களம் கண்டால், மூஞ்சிறை ஒன்றியச் செயலாளர் ஜீன்ஸ், கிள்ளியூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் ஜார்ஜ் ஆகியோர் சீட் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர்.

கடந்த தேர்தலில் ராஜேஷ் குமார் சுமார் 1,01,000 வாக்குகளைப் பெற்றார். தமாகாவின் ஜூட் தேவ்-க்கு 46,000 வாக்குகளும் , நாம் தமிழர் கட்சியின் பீட்டர் ஹாரிஸ்-க்கு 15,000 வாக்குகளும் கிடைத்தன.

மத ரீதியில் தவெக கணிசமான வாக்குகளைப் பிரிக்குமா?

முதன்முறையாக களம் காணும் விஜய்யின் தவெக கணிசமான வாக்குகளை பிரிக்கும் எனக் கூறப்படுகிறது.

இருப்பினும், மீனவர்கள்  மற்றும் கிறிஸ்தவர்களின் வாக்குகள் கணிசமாக கிடைக்க வாய்ப்பிருப்பதால், காங்கிரஸ் கட்சிக்கே களம் சாதகமாக இருப்பதாகப் பேசப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *