திருச்சி,ஏப்.16; திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கதிரவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது தாளக்குடி ஊராட்சிக்குட்பட்ட வாழக்கட்டை பகுதியில் திமுகவினர் சிலர், வாக்காளர்களுக்கு நேற்று முன்தினம் (ஏப்ரல் 14, செவ்வாய்) எவர்சில்வர் பாத்திரங்களை பரிசாக வழங்கியதாகக் கூறப்படுகிறது.
கூப்பன் விநியோகத்தில் பிரச்னை; இளம்பெண்ணுக்கு வசை
அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரசாந்த் என்பவரின் மனைவி சிந்துஜா (25) தனக்கும் பரிசுப் பொருள் கொடுக்கும்படி கேட்டதாகத் தெரிகிறது.
இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி அந்தப் பெண்ணை பரிசுப் பொருள் விநியோகித்த திமுகவினர் சிலர் தரக்குறைவாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது.
மனமுடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை
இதில் மனமுடைந்த அப்பெண் நடந்த விவரங்களை அன்று இரவு கணவர் பிரசாந்திடம் கூறி உள்ளார். தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த சிந்துஜா, வீட்டை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டு சேலையால் தூக்குப் போட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கணவர், வீட்டின்கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று,மனைவியை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றார். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை கோரி மறியல்
இதனிடையே, அவரை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிந்துஜாவின் உறவினர்கள், திருச்சி-சேலம் சாலையில் உத்தமர் கோவில் மேம்பாலத்தில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த கொள்ளிடம் போலீஸார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததைத் தொடர்ந்து மறியலை கைவிட்டனர். பின்னர் அவர்கள் கொள்ளிடம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
புகாரின் பேரில் திமுகவைச் சேர்ந்த 6 பேர் கைது
இதுதொடர்பாக சிந்துஜாவின் தாயார் இளையராணி அளித்த புகாரின்பேரில், தற்கொலைக்குதூண்டியது, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ராஜா, திமுக கிளைச் செயலாளர் ராஜேந்திரன், ரவிக்குமார், ராஜா மனைவி புஷ்பம், ராஜேந்திரன் மனைவி ராஜேஸ்வரி, ராஜ்குமாரின் தாய் அங்குமணி ஆகிய 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள திமுக நிர்வாகிகள் சுரேஷ்குமார், ராஜ்குமார், ரவி மனைவிகார்த்திகா ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர். உயிரிழந்த சிந்துஜாவின் தாயாரை அதிமுக திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் மு.பரஞ்ஜோதி சந்தித்து ஆறுதல் கூறினார்.
இளம்பெண் தற்கொலை; தலைவர்கள் கண்டனம்
இதனிடையே, கூப்பன் விவகாரத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் திமுகவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
