சென்னை,மார்ச்.26; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சூறாவளி பரப்புரையை சென்னையில் நேற்று (மார்ச் 25, 2026) தொடங்கினார். மயிலாப்பூரில் உரையாற்றிய அவர், ஆளுங்கட்சியான திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
திமுக ஒரு குடும்பக் கட்சி: இபிஎஸ் விமர்சனம்
பரப்புரையின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “திமுக என்பது ஒரு குடும்பக் கட்சி; வாரிசு அரசியலை மட்டுமே முன்னிறுத்தி அவர்கள் செயல்படுகிறார்கள்; ஆனால், அதிமுக மட்டுமே மக்களுக்காக உழைக்கும் உண்மையான மக்கள் கட்சி; கடந்த தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கை கூட அவர்கள் நிறைவேற்றவில்லை” என்று குற்றஞ்சாட்டினார்.
கூட்டணி கட்சிகளின் நிலைமை
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் மிகுந்த பதற்றத்தில் இருப்பதாகவும், கூட்டணி கட்சிகளுக்கு திமுக தகுந்த மரியாதையை வழங்குவதில்லை என்றும் அவர் சாடினார். “திமுகவை நம்பினால் நடுரோட்டில்தான் நிற்க வேண்டும்; 20 நாட்களாக போராடித்தான் அவர்கள் கூட்டணியை உறுதி செய்துள்ளனர்; அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு அதிக இடங்களை கொடுத்துவிட்டு, தியாகம் செய்த கட்சிகளை திமுக புறக்கணிக்கிறது” என்று இபிஎஸ் விமர்சித்தார்.
விலைவாசி உயர்வு மற்றும் ஊழல் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடன் சுமை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், திமுக ஆட்சியில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது; கல்விக்கடன் ரத்து போன்ற முக்கிய வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன;
“கலெக்சன், கரப்ஷன், கமிஷன்” என்பதுதான் இந்த அரசின் தாரக மந்திரமாக உள்ளது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களைத்தான் தற்போது திமுக திறந்து வைத்து ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.
மயிலாப்பூரில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த இபிஎஸ்
மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த எடப்பாடி பழனிசாமி, திமுகவின் 5 ஆண்டு கால ஆட்சியில் மக்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும், இந்தத் தேர்தலில் மக்கள் அதற்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் உறுதிபடத் தெரிவித்தார். வரும் ஏப்ரல் 1-ம் தேதி வரை பல்வேறு பகுதிகளிலும் இபிஎஸ் தனது முதற்கட்ட பரப்புரையில் ஈடுபடுகிறார்.
