Skip to content

கோவா நைட் கிளப்பில் பயங்கர தீ; 25 பேர் பலி- 50 பேர் படுகாயம்

கோவாவில் பிரபல இரவுநேர கிளப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்  25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  50 பேர் காயமடைந்தனர். கோவா, இந்தியாவின் பார்ட்டி நகரமாக, அதாவது விருந்துகளின் தலைநகரமாக அறியப்படுகிறது. இங்குள்ள கடற்கரை மிகவும் புகழ்பெற்றதாகும். இங்கு உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். கோவா கடற்கரையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சூரிய குளியலில் ஈடுபடுவதை பெரிதும் விரும்புகின்றனர். கடற்கரை பார்ட்டி கிளப்புகள் இரவு முழுவதும் நடைபெறும் (Rave) ரேவ்ஸ்  எனப்படும் வெறித்தனமான கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்களுக்கு பிரபலமானதாகும்.  குறிப்பாக வார இறுதி நாட்களில் இங்கு இரவுநேர பார்ட்டிகள் களைகட்டுவதுண்டு.  அந்த வகையில், கோவாவின் ஆர்போரா பகுதியில் உள்ள பிரபல நைட் கிளப்பான  (Birch by Romeo Lane) ‘பிர்ச் பை ரோமியோ லேன்’ என்ற கிளப்பில் நேற்றிரவு (06.12.2025) விருந்து மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன., இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு இரவுப் பொழுதை உல்லாசமாக கழித்துக் கொண்டிருந்தனர்.  நள்ளிரவாகிவிட்டதால் பார்ட்டி கிளப்பை மூடும் வேலைகளில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது  சுமார் 1 மணியளவில் சமையலறைப் பகுதியில் இருந்த எரிவாயு சிலிண்டர் பயங்கரமாக வெடித்துச் சிதறியது.  இதனால் அங்கு தீப்பற்றிக் கொண்டது.  தீ மளமளவென பரவி கட்டடம் முழுவதும் எரியத் தொடங்கியது. இதனால் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களும், விருந்துக்கு வந்தவர்களும் சிக்கிக் கொண்டனர். வெளியே தப்பிச் செல்ல முடியாததால் 23 பேர் தீயில் சிக்கி பலியாகினர்.  இவர்களில் பெரும்பாலானவர்கள் நைட் கிளப்பில் வேலை பார்த்தவர்கள். சுற்றுலா பயணிகள் சிலரும் உயிரிழந்துவிட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த துயரச் சம்பவம் கோவா மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தீ விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட நைட் கிளப்பின் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.  அதன் உரிமையாளர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார், காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக  உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என  அஞ்சப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *