கோவை,டிச.28; கோவையில், ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான புதிய ஹாக்கி மைதானத்தை, துணை முதலமைச்சர் உதயநிதி நாளை மறுதினம் (30.12.2025) திறந்து வைக்கிறார்.
ஹாக்கி மைதானத்தின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:
அமைவிடம்: கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆர்.எஸ்.புரம் பகுதி.
மதிப்பீடு: 6,500 சதுரமீட்டர் பரப்பளவில் சுமார் ₹9.67 கோடி மதிப்பீட்டில் இந்த சர்வதேச தரத்திலான மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆக்கி மைதானத்தை சுற்றிலும் கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளது. ஆக்கி பெட்டிகள் நடத்த வசதியாக 6 மின்கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மின்கோபுர விளக்கிலும் 500 வாட்ஸ் திறன் கொண்ட 20 எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன.
அனைத்து வசதிகளுடனும் கூடிய ஹாக்கி மைதானம்
சிறப்பம்சங்கள்: இதில் சர்வதேச ஆக்கி கூட்டமைப்பின் (FIH) தரத்திற்கு இணையான செயற்கை புல்வெளி (AstroTurf) தளம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நவீன வசதிகளுடன் கூடிய வீரர்கள் உடை மாற்றும் அறை, ஓய்வறை, கழிப்பறை ஆகிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ஆக்கி மைதானத்துக்கு தேவையான தண்ணீர் வழங்குவதற்காக தொட்டியும் கட்டப்பட்டு உள்ளது.
பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார் உதயநிதி ஸ்டாலின்
திறப்பு விழா: இந்த மைதானத்தைத் திறந்து வைத்த பிறகு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறிது நேரம் அங்கு ஆக்கி விளையாடவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கிறார்.
இந்த புதிய மைதானம் கோயம்புத்தூரில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு, குறிப்பாக ஆக்கி வீரர்களுக்கு ஒரு பெரிய உந்துதலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
