கோவை,மே.23; கோயம்புத்தூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி தெரிவித்துள்ளார்.
சூலூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
கோவை மாவட்டம் சூலூரை அடுத்த ஒரு கிராமத்தில் பெற்றோருடன் வசித்து வந்த 10 வயது சிறுமி, கடந்த 21ஆம் தேதி (நேற்று முன்தினம்) மாலையில் அருகில் உள்ள கடைக்குச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணையில் இறங்கினர்.
முட்புதரில் மீட்கப்பட்ட சடலம்
சிறுமியைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் குளத்தின் கரையோரம் முட்புதரில் கிடந்த அந்த சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. விசாரணையில், அந்த சிறுமியை இரண்டு பேர் ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து உடலை முட்புதரில் வீசிச் சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
24 மணி நேரத்தில் கொலையாளிகள் கைது: ஐ.ஜி. ரம்யா பாரதி
இந்த கொடூரக் கொலை வழக்கு குறித்து மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி, கோவை சரக டி.ஐ.ஜி. சாமிநாதன் மற்றும் எஸ்.பி. பவன்குமார் ஆகியோருடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், சிறுமி காணாமல் போன புகார் கிடைத்த உடனேயே எப்.ஐ.ஆர். (FIR) பதிவு செய்யப்பட்டது. சிறுமியைக் கண்டுபிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அப்பகுதியில் இருந்த சுமார் 250 சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
இந்த விசாரணையின் மூலம், சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்தி (வயது 33) என்பவர் சிறுமியை ஆசைவார்த்தை கூறி தென்னந்தோப்பிற்கு அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கார்த்திக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் மோகன்ராஜ் (வயது 30) என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் கூலித் தொழிலாளிகள் ஆவர்.
தப்ப முயன்றபோது குற்றவாளிக்கு கால் முறிவு
கட்டடம் ஒன்றில் பதுங்கியிருந்த கார்த்தியை போலீசார் பிடிக்க முயன்றபோது, அவர் மேல்மாடியில் இருந்து கீழே குதித்து தப்பிக்க முயன்றார். இதில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. தற்போது அவர் கோவை அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் காவலுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
போக்சோ சட்டத்தில் கடும் நடவடிக்கை
இந்த வழக்கில் உடல்கூராய்வின் முழு அறிக்கை இன்னும் வரவில்லை என்று குறிப்பிட்ட ஐ.ஜி. ரம்யா பாரதி, கொலையாளிகள் இருவர் மீதும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான பிரிவுகளில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு அரசின் நிவாரணத் தொகை விரைவில் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
கொலையாளிகளை உடனே கைது செய்தது போல, குற்றப்பத்திரிகையும் தாக்கல்
கொலையாளிகளை 24 மணி நேரத்திற்குள் கைது செய்தது போலவே, இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையும் (Charge sheet) மிக விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
கோவையில் சிறுமிக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதி ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியுள்ளது. எனினும், தமிழ்நாடு காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு 250-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, 24 மணி நேரத்திற்குள் கொலையாளிகளைச் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் விரைவாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, குற்றவாளிகளுக்கு சட்டத்தின் முன் அதிகபட்ச தட்டனை பெற்றுத் தருவதே, பாதிக்கப்பட்ட சிறுமியின் ஆன்மாவிற்கும் அவரது குடும்பத்திற்கும் கிடைக்கும் உண்மையான நீதியாகும்.
