சென்னை,ஏப்.21; 234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு நாளை மறுதினம் (ஏப்ரல் 23, வியாழன்) தேர்தல் நடைபெறுகிறது.
இதில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, புதுவரவான தவெக என நான்கு முனை போட்டி நிலவுகிறது.
இந்தக் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர்.
கொளுத்தும் வெயிலையும் மிஞ்சும் வகையில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அனல் பறக்க நடைபெற்ற தலைவர்களின் தேர்தல் பரப்புரை
திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி, வைகோ, திருமாவளவன், பிரேமலதா விஜயகாந்த், இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி, டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் பரப்புரையில் ஈடுபட்டனர்.
இதேபோல் அதிமுக+பாஜக கூட்டணிக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பியூஷ் கோயல், ராஜ்நாத் சிங், மகாராஷ்ட்ரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் தீவிர பரப்புரை மேற்கொண்டனர்.
மாலை 6 மணியுடன் பரப்புரையை நிறைவு செய்த தலைவர்கள்
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரிலும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீமான் தான் போட்டியிடும் காரைக்குடியிலும், தவெக தலைவர் விஜய் சென்னை நந்தனத்திலும் தங்களது தேர்தல் பரப்புரை நிறைவு செய்தனர்.
இவ்வாறு அனல் பறக்கும் வகையில் நடந்துவந்த பரப்புரை இன்று (ஏப்ரல் 21, செவ்வாய்) மாலை 6 மணிக்கு ஓய்ந்தது.
இதனைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அமைதி காலம் (Silence Period) தொடக்கம்
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 126-ன் படி, வாக்குப்பதிவு முடிவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக ‘அமைதி காலம்’ தொடங்குகிறது. அதன்படி, இன்று மாலை 6 மணி முதல் தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் அல்லது எந்தவொரு பிரசார நடவடிக்கைகளிலும் ஈடுபட அனுமதியில்லை.
வெளியூர் நபர்களுக்குத் தடை
தேர்தல் நடைபெறும் தொகுதியில் வாக்காளர்களாக இல்லாத அரசியல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் வெளியூர் நபர்கள் அனைவரும் அந்தந்த தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.
திருமண மண்டபங்கள், விடுதிகள் (Lodges) மற்றும் விருந்தினர் இல்லங்களில் தங்கியிருப்பவர்கள் குறித்து போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபடுவார்கள்.
மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தலைமைத் தேர்தல் அதிகாரி எச்சரித்துள்ளார்.
மதுக்கடைகள் மூடல் (Dry Days)
தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய, இன்று (ஏப்ரல் 21) காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவு வரை தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும். அதேபோல், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4-ம் தேதியும் மதுபானக் கடைகள் மூடப்படும் (Dry Day) என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளக் கண்காணிப்பு
இன்று மாலை 6 மணிக்குப் பிறகு தொலைக்காட்சி, வானொலி அல்லது சமூக வலைதளங்கள் (Facebook, WhatsApp, X) மூலமாகத் தேர்தல் தொடர்பான கருத்துகளைப் பரப்புவது குற்றமாகும். குறிப்பாக, AI மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் அல்லது தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வாகனக் கட்டுப்பாடுகள்
வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட பிரசார வாகனங்களுக்கான அனுமதி இன்று மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்துவிட்டது.
வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளர் ஒரு வாகனத்தையும், அவரது முகவர் ஒரு வாகனத்தையும் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுவர்.
வாக்காளர்களை வாகனங்களில் அழைத்து வருவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
நாளை மறுதினம் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரம்
நாளை மறுதினம் வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடையும். மாலை 6 மணிவரை வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்கு செலுத்த அனுமதிக்கப்படுவார்கள். கோடைக்காலம் என்பதால் வாக்குச் சாவடிகளில் குடிநீர் கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
வாக்குப்பதிவை முழுமையாக வீடியோ பதிவு செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
