Skip to content

சட்டப்பேரவையில் சனாதனம் குறித்த பேச்சால் சர்ச்சை; உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக கண்டனம்!

சென்னை,மே.13; தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் நேற்று (மே 12, 2026) தனது முதல் உரையை நிகழ்த்தினார்.

அப்போது அவர், ஒரு வண்டிக்கு பிரேக் எப்படியோ, அப்படித்தான் ஆளுங்கட்சிக்கு எதிர்க்கட்சி என்று பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டதை மேற்கோள் காட்டி பேசினார்.

சனாதனம் ஒழிய வேண்டும் என உதயநிதி பேச்சு

நடந்து முடிந்த தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை ஆளுங்கட்சிக்கு மக்கள் வழங்கவில்லை என்றாலும் திமுக தலைமையில் தேர்தலை சந்தித்து வென்ற தோழமை இயக்க சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவோடு ஆட்சி அமைத்திருக்கக்கூடிய புதிய அரசுக்கும் முதலமைச்சர் விஜய்க்கும் தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக உதயநிதி குறிப்பிட்டார்.

வெல்க தமிழ்… வாழ்க தமிழ்நாடு… மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிய வேண்டும்” என்று கூறி தனது உரையை உதயநிதி முடித்தார். அவரது இந்த கருத்துக்கு முதலமைச்சர் விஜய் கையெடுத்து கும்பிட்டார் .

சனாதனம் பற்றிய பேச்சு; உதயநிதிக்கு பாஜக கண்டனம்

சனாதனம் குறித்த உதயநிதியின் இந்தப் பேச்சுக்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “சட்டமன்றத்தில் தனது முதல் உரையிலேயே கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையான சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி பேசியிருப்பது, அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது; தொடர்ந்து இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசுவது கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.

உதயநிதி அரசியல் ரீதியாக பக்குவப்படவில்லை: நாகேந்திரன்

சட்டப்பேரவையின் முதல் உரையிலேயே கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையான சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என உதயநிதி பேசியிருப்பது, அரசியல் ரீதியாக அவர் இன்னும் பக்குவப்படவில்லை என்பதைக் காட்டுவதாக நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

சனாதனத்தின் மீது அவா் தொடா்ந்து கல்லெறிவது கடும் கண்டனத்துக்குரியது; அரசியலில் வளர வேண்டுமானால் ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீது உங்களுக்குள்ள வெறுப்புணா்வை தவிா்த்து மதநல்லிணக்கத்தைப் போற்றுவது அவசியமாகும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.

உதயநிதியின் சனாதப் பேச்சு: வானதி சீனிவாசனும் கண்டனம்

உதயநிதியின் பேச்சுக்கு பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசனும் தனது எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், சனாதன தர்மம் அல்லது இந்து மதத்தை ஒழிப்பதுதான் திமுகவின் கொள்கை என்றால், அதை ஏன் அவர்கள் தேர்தல் அறிக்கையிலோ அல்லது பரப்புரையிலோ வெளிப்படையாகச் சொல்லவில்லை என்று வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுகவின் இரட்டை நிலை: தேர்தல் சமயத்தில் “நாங்கள் இந்துக்களுக்கு விரோதி அல்ல” என்று மு.க.ஸ்டாலின் பேசியதை மக்கள் நம்பவில்லை என்றும், அதனால்தான் அவர்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டனர் என்றும் வானதி குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் பாடம் புகட்டியும் உதயநிதி திருந்தவில்லை: வானதி

அரசியல் பின்னணி: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ள நிலையில், சிறுபான்மையினர் வாக்குகள் இனி கிடைக்காது என்ற அச்சத்தில், தங்களை மீண்டும் இந்து விரோதியாகக் காட்டிக்கொண்டு அந்த வாக்குகளைப் பெற திமுக முயற்சிப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.

தேர்தலில் மக்கள் பாடம் புகட்டிய பிறகும் உதயநிதி ஸ்டாலின் தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை என்றும், வரும் காலங்களில் மக்கள் இதற்கு உரிய பதிலடி கொடுப்பார்கள் என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *