Skip to content

சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை இன்று மாலை ஓய்கிறது; கடைசிநேர வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் மும்முரம்!

சென்னை,ஏப்.21; தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுதினம் (ஏப்ரல் 21, வியாழன்) நடைபெறுகிறது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக என நான்கு முனை போட்டி நிலவுகிறது.

ஆட்சியைத் தக்க வைக்க திமுகவும், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அதிமுகவும் முட்டி மோதுகின்றன.

இவைதவிர இம்முறையும் தனித்துக் களம் கண்டுள்ள நாம் தமிழர் கட்சி மற்றும் அரசியலுக்குப் புதிதான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் ஆட்சியைப் பிடிக்க மல்லுக்கட்டுகின்றன.

மு.க.ஸ்டாலின், இபிஎஸ், சீமான் உள்ளிட்டோர் தீவிர பரப்புரை

திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கடந்த மாதம் (மார்ச்) 31 ஆம் தேதி திருவாரூரில் தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார்.

அவர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டம், சாலை வலம் நிகழ்ச்சி மற்றும் காலையில் நடைபயணம் மேற்கொண்டு வாக்காளர்களை சந்திப்பது என திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

ஆட்சியை தக்கவைக்க திமுக, மீண்டும் பிடிக்க அதிமுக மல்லுக்கட்டு

அதிமுக கடந்த 2021ஆம் ஆண்டு இழந்த ஆட்சியை மீண்டும் பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கில் களம் கண்டுள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 25ஆம் தேதி சென்னை மயிலாப்பூரில் தனது பரப்புரையை தொடங்கி நாள்தோறும் 2 அல்லது 3 இடங்களில் வாக்கு சேகரித்து வருகிறார்.

வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பது, திறந்தவெளி வாகனங்களில் ஊர்வலம் செல்வது எனத் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது.

இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள்

தேர்தல் பிரசாரம் முடிவடைய இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் இன்று தனது பரப்புரையை நிறைவு செய்கிறார்.

அதேபோல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் எடப்பாடி தொகுதியிலும், தவெக தலைவர் விஜய் சென்னை நந்தனத்திலும் பரப்புரையை நிறைவு செய்கின்றனர். நாம் தமிழர் கட்சி சீமான் தான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில் பரப்புரையை முடித்துக் கொள்கிறார்.

தேர்தல் பரப்புரை இன்று மாலை ஓய்கிறது

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் தேர்தல் பரப்புரை இன்று (ஏப்ரல் 21, செவ்வாய்)மாலை 6 மணியுடன் ஓய்கிறது.

மாலை 6 மணிக்குப் பிறகு வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அதிரடி கட்டுப்பாடுகள்

பிரசாரம் இன்று மாலை முடிவடைவதைத் தொடர்ந்து, ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் வரை பல்வேறு கட்டுப்பாடுகளைத் தேர்தல் ஆணையம் விதித்துள்ளது:

மதுக்கடைகள் மூடல்: இன்று முதல் வாக்குப்பதிவு முடியும் வரை மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும்.

கண்காணிப்பு தீவிரம்: பணப்பட்டுவாடாவைத் தடுக்கப் பறக்கும் படைகள் 24 மணிநேரமும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

அமைதி காலம்: மாலை 6 மணிக்கு மேல் பொதுக்கூட்டங்களோ, ஊர்வலங்களோ நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வரும் 23ஆம் தேதி வாக்குப்பதிவு; மே 4-ல் முடிவுகள்

சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க 5.67 கோடி பேர் தகுதி பெற்றுள்ளனர். வாக்குப்பதிவிற்கென சுமார் 75,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்கு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு, மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *