சர்வதேச பயணங்களின் போது பயணிகளின் உடைமைகளைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்ப்பது விமான நிறுவனங்களின் கடமையாகும். இதில் தவறிய எமிரேட்ஸ் (Emirates) மற்றும் யுனைடெட் ஏர்லைன்ஸ் (United Airlines) நிறுவனங்களுக்குச் சென்னை நுகர்வோர் நீதிமன்றம் ரூ. 5 லட்சம் அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
வழக்கின் பின்னணி என்ன?
சென்னையைச் சேர்ந்த பிரபல எலும்பு முறிவு சிகிச்சை நிபுணரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான டாக்டர் மயில்வாகனன் நடராஜன், கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் அமெரிக்காவின் ஆஷ்பில் (Asheville) நகருக்குப் பயணம் மேற்கொண்டார்.
அவர் சென்னையிலிருந்து துபாய்க்கும், அங்கிருந்து சிகாகோவிற்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மூலமாகவும், சிகாகோவிலிருந்து ஆஷ்பில் நகருக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் மூலமாகவும் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். இதற்காக சுமார் ரூ. 10.89 லட்சம் செலவிடப்பட்டது.
காணாமல் போன பயணியின் உடைமைகள்
ஆஷ்பில் விமானநிலையத்தில் சோதனை செய்யப்பட்ட அவரது மூன்று பைகளும் வந்தடையவில்லை எனத் தெரியவந்தது. இது குறித்து உடனடியாகப் புகார் அளிக்கப்பட்டும், 24 மணி நேரத்தில் பைகள் ஒப்படைக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டும், நீண்ட நாட்களாகியும் பைகள் கிடைக்கவில்லை. இறுதியில் அவை ‘கண்டறிய முடியாதவை’ என்று அறிவிக்கப்பட்டன.
இதில் ஆடை, மருந்து பொருட்கள், புத்தகங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் என முக்கியமான பொருட்கள் இருந்ததால், வெளிநாட்டில் அவர் கடும் சிரமத்திற்கு உள்ளானார்.
நுகர்வோர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு
இது தொடர்பாக அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை (வடக்கு) மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், சேவை குறைபாட்டிற்காக இரண்டு விமான நிறுவனங்களும் தலா ரூ. 2.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், வழக்குச் செலவாக ரூ. 5,000 வழங்கவும் ஆணையிடப்பட்டது.
யுனைடெட் ஏர்லைன்ஸ் ஏற்கனவே வழங்கிய ரூ. 1.23 லட்சத்தைக் கழித்துவிட்டு மீதித் தொகையை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
பயணிகள் கவனக்க வேண்டிய விசயங்கள்
சர்வதேசப் பயணங்களின் போது உங்கள் லக்கேஜ் தொலைந்துவிட்டால், உடனடியாக விமான நிலையத்திலேயே ‘Property Irregularity Report’ (PIR) தாக்கல் செய்வது அவசியம். விமான நிறுவனங்கள் உரியப் பதில் அளிக்காத பட்சத்தில் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகுவது உங்கள் உரிமையாகும்.
நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்பு சொல்வது என்ன?
இந்தத் தீர்ப்பு, பயணிகளின் உரிமைகளை உறுதிப்படுத்துவதோடு, விமான நிறுவனங்கள் தங்களின் சேவையில் அலட்சியமாக இருக்கக்கூடாது என்ற எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. உங்களின் விலைமதிப்பற்ற நேரமும் பொருட்களும் தொலைக்கப்பட்டால், அதற்குரிய இழப்பீட்டைப் பெற சட்ட ரீதியாகப் போராடலாம் என்பதற்கு இந்த வழக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
