Skip to content

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை: வரும் 27ஆம் தேதி தொடங்கி வைக்கிறார், முதலமைச்சர் விஜய்!

சென்னை,மே.23; தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” (Singapen Special Task Force) வருகிற 27-ஆம் தேதி முறைப்படி தொடங்கி வைக்கப்பட உள்ளது. முதலமைச்சர் விஜய் இந்த புதிய அதிரடிப்படையை பிரமாண்ட விழாவுடன் தொடங்கி வைக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் பெண்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த சிறப்புப் படையை அமைப்பதாக அறிவித்திருந்தார். தற்போது அந்த அறிவிப்பு அரசாணையாக மாறி, மிகக் குறுகிய காலத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சிங்கப்பெண் படை உருவான பின்னணி

முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்றதும், பெண்களின் பாதுகாப்பை அரணாக மாற்றும் வகையில் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ உருவாக்கப்படும் என உறுதியளித்தார். இந்த அறிவிப்பு வெளியாகி உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

இந்த அதிரடிப்படையின் முதல் பெண் ஐ.ஜி.-யாக (IG) பவானீஸ்வரி ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இத்துறையின் மேம்பாட்டிற்காக, இந்த படைக்கு ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ என்ற கம்பீரமான பெயரை ஐ.ஜி. பவானீஸ்வரியே பரிந்துரைத்தார். அவரது ஆலோசனையை ஏற்று முதலமைச்சர் விஜய் இந்த பெயரைச் சூட்டியதோடு, படையை வழிநடத்தும் முழுப் பொறுப்பையும் அவரிடமே ஒப்படைத்துள்ளார்.

அதிரடிப்படையின் கட்டமைப்பு மற்றும் ரோந்து வாகனங்கள்

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைந்து தடுத்து நிறுத்தவும், அவசர காலங்களில் உடனே உதவவும் இக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிறப்புப் படையில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு (SP), 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் (DSP) மற்றும் 4 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட காவலர்கள் முதற்கட்டமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெண்களின் பாதுகாப்பைக் கண்காணிக்கும் வகையில், 24 மணி நேரமும் செயல்படக்கூடிய 30 அதிநவீன ரோந்து வாகனங்கள் தற்பொழுது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் பிரமாண்ட தொடக்க விழா!

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா வருகிற 27- ஆம் தேதி (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு, சென்னை ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் மிகப் பெரியளவில் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் முதலமைச்சர் விஜய் நேரில் கலந்துகொண்டு, கொடியசைத்து ரோந்து வாகனங்களைத் தொடங்கி வைக்க உள்ளார். விழாவுக்கான விரிவான ஏற்பாடுகளைத் தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் தீவிரமாகச் செய்து வருகின்றனர். நேற்று மாலை, தமிழ்நாடு டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விழா நடைபெறவிருக்கும் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கிற்குச் சென்று, பாதுகாப்பு மற்றும் மேடை ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு முக்கிய ஆலோசனைகளை வழங்கினர்.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை ஒரு முக்கிய நடவடிக்கை

பெண்களின் பாதுகாப்பு என்பது வெறும் வார்த்தையாக இல்லாமல், ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ மூலம் அது செயலாக மாறியுள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை, தமிழ்நாட்டில் பெண்கள் அச்சமின்றி நடமாடுவதையும் அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் ஒரு மிக முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. மே 27 முதல் இந்த படை முழு வீச்சில் தமிழ்நாடு வீதிகளில் களம் காணத் தயாராகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *