Skip to content

சிறப்பு அதிரடிப்படை’ திட்டத்தை நிறுத்தி வைத்திருப்பது ஏன்? – தவெக அரசுக்கு திமுக எம்.பி. கனிமொழி கேள்வி!

சென்னை,மே.29; தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு சார்ந்த விவகாரங்கள் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், புதிய திட்டங்கள் தொடங்குவதும் தள்ளிப்போவதுமாக இருக்கும் சூழல் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் அரசுக்கு முக்கிய கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைத் திட்டம்

தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்புக்காக “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்தார். இந்த அதிரடிப் படையின் முதல் பெண் ஐ.ஜி.யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இப்படையில் ஒரு காவல் கண்காணிப்பாளர்கள், இரண்டு துணை காவல் கண்காணிப்பாளர்கள், மற்றும் நான்கு காவல் ஆய்வாளர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்ட போலீசார் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

இப்படையில் இடம்பெறும் பெண் போலீசார் மற்றும் பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு என பிரத்யேகமான, மிடுக்கான புதிய சீருடையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நேவி ப்ளு கலரில் அரைக்கை மேல் சட்டையும், காக்கி கலர் கால் சட்டையும்ம், கருப்பு நிற தொப்பி மற்றும் ஷூக்களுடன் இந்த சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து ரத்தாகும் தொடக்க விழாக்கள்

முதலில் இந்த சிறப்பு அதிரடிப்படையின் தொடக்கவிழா மே 27-ஆம் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் காரணமாக இந்த விழா தள்ளிவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மே 29ஆம் தேதியன்று, அதாவது இன்றைய தினம் இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென இந்தத் தொடக்க விழாவும் இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனிமொழி எம்.பி.யின் அடுக்கடுக்கான கேள்விகள்

இந்தத் தொடக்க விழா அடுத்தடுத்து ரத்து செய்யப்படுவதையும், திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி கனிமொழி எம்.பி. தற்போதைய அரசை நோக்கி வலுவான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

“பொதுமக்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது. குறிப்பாக பெண்கள் பாதுகாப்புக்காக கொண்டு வரப்படுவதாகக் கூறப்பட்ட இந்த ‘சிறப்பு அதிரடிப்படை’ திட்டம் அடுத்தடுத்து நிறுத்திவைக்கப்படுவது ஏன்? மாநிலத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் குற்றச் சம்பவங்களைத் தடுக்க இந்த அரசு என்ன செய்யப்போகிறது?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்தடுத்து இரண்டு முறை ரத்து செய்யப்பட்டதால் விபரீதம்

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அறிவிக்கப்பட்ட ஒரு முக்கிய திட்டத்தின் தொடக்க விழா, அடுத்தடுத்து இரண்டு முறை ரத்து செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பலத்த விவாதங்களை உருவாக்கியுள்ளது.

எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாகவும், மக்களின் பாதுகாப்பு அச்சத்தைப் போக்கும் விதமாகவும் இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைத் திட்டம் எப்போது முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *