Skip to content

சென்னையில் விஜய்யின் பரப்புரை திடீர் ரத்து: தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் அதிர்ச்சி!

சென்னை,ஏப்.06; தமிழ்நாடு அரசியல் களம் சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி சூடுபிடித்துள்ள நிலையில், கட்சித் தலைவர்களின் பரப்புரை வேகமெடுத்து வருகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சீமான், அன்புமணி உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வரிசையில் தவெக தலைவர் விஜய்யும் பரப்புரைக்குச் சென்று வருகிறார். சென்னை பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்த கையோடு அந்த தொகுதியில் பரப்புரை செய்தார்.

போதிய பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தைக் கூறி, ஆதவ் அர்ஜூனா போட்டியிடும் வில்லிவாக்கம் தொகுதியில் பரப்புரையை ரத்து செய்தார்.

இதுபோன்ற சூழலில், இன்று (06.04.2026) சென்னையில் திட்டமிடப்பட்டிருந்த விஜய்யின் தேர்தல் பரப்புரை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை பரப்புரை ரத்து – பின்னணி என்ன?

சென்னையில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் இன்று (ஏப்ரல் 6, திங்கள்) பரப்புரை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம், தியாகராயநகர் ஆகிய தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்தனர்.

இந்நிலையில் விஜய்யின் பரப்புரைக்கு நேற்றிரவு காவல்துறையினர் அனுமதி வழங்கினர். இதில் வில்லிவாக்கம் தொகுதியில் பகல் 12 மணி முதல் மதியம் 1 மணிக்குள் பரப்புரை செய்து முடிக்கவும், தியாகராயநகர் தொகுதியில் பிற்பகல் 2 மணி முதல் 3 மணிக்குள் பரப்புரையில் ஈடுபடவும் அனுமதி வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.

அனுமதிக்கப்பட்ட நேரம் போதுமானதாக இருக்காது எனக்கூறி ரத்து

இந்த அனுமதிக்கப்பட்ட நேரத்தில் விஜய் பரப்புரை செய்து முடிக்க போதுமானதாக இருக்காது எனக் கட்சி நிர்வாகிகள் தரப்பில் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து விஜய்யின் பரப்புரை ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியானது. காவல்துறை அனுமதித்த நேரத்திற்குள் பரப்புரையை முடித்துவிட்டு மற்றொரு இடத்திற்குச் செல்ல காலதாமதமாகிவிடலாம் என்பதால், பரப்புரை ரத்து செய்யப்பட்டதாக தவெக கட்சியினர் தெரிவித்தனர்.

ஏமாற்றத்தில் தொண்டர்கள்

தமிழ்நாட்டு அரசியலில் மாற்று சக்தியாக உருவெடுப்பாரா என்ற எதிர்பார்ப்பை தூண்டியிருக்கும் விஜய்யின் இன்றைய பரப்புரை ரத்து சில பின்னடைவுகளை ஏற்படுத்தினாலும், இது அடுத்தகட்டப் பெரிய அளவிலான கூட்டத்திற்கு ஒரு முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது. விஜய்யின் அடுத்தகட்டப் பயணத் திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *