சேலம்,ஜூன்.14: தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவத்தில், பெண்களின் ஆபாச வீடியோக்களை மொபைல் போனில் ரகசியமாக பதிவு செய்து, அவற்றை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டி வந்த மணிகண்டன் (40) என்ற நபரை சேலம் மாநகர போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாடு அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வைரலான ஆடியோவும் வெளிவந்த அதிர்ச்சி உண்மைகளும்
சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பெண் ஒருவரின் ஆடியோ பதிவு மிக வேகமாக வைரலானது. அந்த ஆடியோவில், சேலம் நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த மளிகைக் கடை உரிமையாளர் எம். மணிகண்டன் என்பவர், தன்னை ஏமாற்றி ஆபாசமாக வீடியோ எடுத்ததாகவும், அதை காட்டி தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும் அந்த பெண் குற்றஞ்சாட்டினார். மேலும் 50-க்கும் மேற்பட்டபெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப்பெண் கோரியிருந்தார்.
மேலும், அந்த நபரின் மொபைல் போனில் பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பதை தான் கண்டறிந்ததாகவும், அதில் சில வீடியோக்களை தான் ஏற்கனவே அழித்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி காவல்துறை வரை சென்றடைந்தது.
போலீசாரின் அதிரடி விசாரணை மற்றும் கைது நடவடிக்கை
சமூக ஊடகங்களில் வெளியான ஆடியோ ஆதாரங்களின் அடிப்படையில், சேலம் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், மணிகண்டன் பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் பெண்களை கண்டறிந்து, அவர்களுக்கு கடன் உதவி வழங்குவதாகக் கூறி நெருக்கமாகியுள்ளார்.
பின்னர் அவர்களின் அனுமதியின்றி ரகசியமாக வீடியோக்களை எடுத்து, அதை வைத்து பிளாக்மெயில் செய்து வந்துள்ளார் என்பது உறுதியானது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர். அவரது மொபைல் போனை பறிமுதல் செய்த போலீசாருக்கு, அதில் பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) விளக்கம்
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) நிர்வாகி என்ற தகவல் பரவியதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இருப்பினும், இந்த விவகாரம் குறித்து தவெக சேலம் தெற்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். மணிகண்டன் உடனடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில்:”கைது செய்யப்பட்டுள்ள மணிகண்டனுக்கும் தவெகவிற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. அவர் கட்சியின் உறுப்பினரோ அல்லது எந்தவொரு பொறுப்பிலும் உள்ள நபரோ அல்ல. பெண்களுக்கு எதிரான இத்தகைய கொடூர குற்றங்களை தவெக ஒருபோதும் சகித்துக் கொள்ளாது. காவல்துறை இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், கைது செய்யப்பட்டுள்ள மணிகண்டன் தவெகவை சேர்ந்தவர் தான் என்றும், ஆபாச வீடியோ புகாரில் சிக்கியதால், அவரை கட்சியை விட்டு நீக்கிவிட்டு உண்மையை மறைப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சைபர் குற்றங்களிலிருந்து பெண்கள் பாதுகாப்பாக இருப்பது எப்படி?
சேலத்தில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம், மொபைல் மற்றும் தொழில்நுட்ப யுகத்தில் பெண்கள் எவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை மீண்டும் உணர்த்தியுள்ளது. உங்களுக்குத் தெரிந்தவர்களோ அல்லது அறிமுகமில்லாதவர்களோ உங்களை ஆபாச வீடியோக்கள் அல்லது புகைப்படங்களை காட்டி மிரட்டினால், பயப்படாமல் உடனடியாக காவல்துறையையோ அல்லது 1930 என்ற சைபர் க்ரைம் உதவி எண்களையோ தொடர்பு கொள்ள வேண்டும். சட்டம் எப்போதும் உங்களுக்கு துணை நிற்கும்.
