Skip to content

ஜனநாயகன் திரைப்படத் தணிக்கை வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் நாளை மறுதினம் தீர்ப்பு!

சென்னை, ஜன.07; திரைப்படத்துறையில் சமீபகாலமாக தணிக்கை வாரியத்திற்கும் (CBFC) இயக்குநர்களுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வரிசையில், அரசியல் கதைக்களத்தைக் கொண்ட ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் நாளை மறுதினம் (09.01.2026) தீர்ப்பளிக்கிறது.

ஜனநாயகன் பட வழக்கின் பின்னணி என்ன?

ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஜனநாயகன்’. விஜய் நடித்திருக்கும் கடைசிப்படமாக கருதப்படும் இப்படம் வரும் 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்தப் படம் தணிக்கைக்காக விண்ணப்பிக்கப்பட்ட போது, அதில் உள்ள சில காட்சிகள் மற்றும் வசனங்களுக்கு தணிக்கை வாரியம் ஆட்சேபனை தெரிவித்தது. குறிப்பாக, அரசியல் ரீதியான விமர்சனங்கள் மற்றும் சமூகப் பிரச்னைகள் தொடர்பான காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று வாரியம் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

தணிக்கை வாரியத்திற்கு எதிராக படநிறுவனம் வழக்கு

இதை எதிர்த்து படக்குழுவினர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தணிக்கை வாரியத்தின் கெடுபிடிகளால் படத்தின் வெளியீடு பாதிக்கப்படுவதாகவும், படைப்புச் சுதந்திரம் நசுக்கப்படுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், படத்திற்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை எனவும், படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கிட உத்தரவிடக்கோரியும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

தணிக்கை வாரிய அறிவுறுத்தல்; சில காட்சிகளை நீ்க்கிய படக்குழு

இவ்வழக்கு நேற்று (06.01.2026) விசாரணைக்கு வந்தபோது, படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், சில காட்சிகளை நீக்கினால் யு/ஏ சான்றிதழ் வழங்கப்படும் என்று மத்திய தணிக்கை வாரியம் கூறியதாகவும், அதன்படி படக்குழு செய்ததாகவும் தெரிவித்தார்.
அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றிய நிலையில், யாரோ புகாரளித்துள்ளதாகக் கூறி சான்றிதழ் வழங்காமல் இருப்பதாக வழக்குரைஞர் கூறினார்.

தணிக்கைக்குழு முன்வைத்த வாதம்

வழக்கில் தணிக்கைக் குழு முன் வைத்த வாதத்தில், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்புவது குறித்து ஜனவரி 5ஆம் தேதியே தணிக்கை வாரியம், படத்தயாரிப்பு நிறுவனத்திற்கு தெரிவித்துவிட்டதாகக் கூறியது.

நாளை மறுதினம் (09.01.2026) படம் ரிலீஸ் எனக்கூறி சென்சார் சான்று கேட்க முடியாது;
பரிசீலனைக் குழுவில் இடம்பெறாத உறுப்பினர்களைக் கொண்ட ஒரு புதிய குழுவால் அந்தத் திரைப்படம் மறுபடியும் பார்க்கப்பட வேண்டும்

குழு உறுப்பினர் பரிந்துரையில் திருப்தி இல்லை என்றால், மறு தணிக்கை செய்ய சென்சார் போர்டு தலைவருக்கு அதிகாரம் உண்டு.

படத்தில் ராணுவப் படைகளின் இலச்சினை பயன்படுத்தப்பட்டுள்ளதால், அத்துறை நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும்.

நீதிமன்றத்தின் தற்போதைய நிலைப்பாடு

இந்த வழக்கில். கடந்த சில தினங்களாக இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, படத்தின் தன்மையையும், தணிக்கை வாரியத்தின் விதிகளையும் ஆய்வு செய்தார்.
வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கின் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி அறிவித்துள்ளார்.

படத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை தாக்கல் செய்ய உத்தரவு

படத்துக்கு ஆட்சேபனை தெரிவித்து அளிக்கப்பட்டுள்ள புகாரை நாளை (08.01.2026) தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனநாயகன் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள அதே தேதியன்று தான் (09.01.2026) தீர்ப்பும் அறிவிக்கப்படவிருப்பதால், படம் அன்றைய தினம் வெளியாகுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *