நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை ஜஸ்டின் கிரீவ்ஸின் அபார இரட்டை சதத்தால் மேற்கிந்திய தீவுகள் அணி டிரா செய்தது. கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற இப்போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 231 ரன்களும், மேற்கிந்திய தீவுகள் அணி 167 ரன்களும் எடுத்தன. 64 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாவது இன்னிங்சை ஆடத்தொடங்கிய நியூசிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 466 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதம் 145 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 176 ரன்களும் குவித்தனர். பின்னர் 531 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு கட்டத்தில் 72 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இதனால் போட்டி டிரா ஆகும் வாய்ப்பு குறைந்தது. பின்னர் வந்த ஜஸ்டின் கிரீவ்ஸூம் ஷாய் ஹோப்பும் மேற்கிந்திய தீவுகள் அணியை தோல்வியிலிருந்து மீட்க கடுமையாகப் போராடினர். நிதானமாக விளையாடி சதமடித்த ஷாய் ஹோப், 140 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் ஜஸ்டின் கிரீவ்ஸ் உடன் கெமர் ரோச் கைகோர்த்தார். நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு கூர் மழுங்கிப் போயிருந்ததை மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் நன்றாக பயன்படுத்திக் கொண்டனர். நியூசிலாந்தின் பீல்டிங் மோசமாக இருந்தது மேற்கிந்திய தீவுகளுக்கு சாதகமாக அமைந்தது. அதனால் கெமர் ரோச் ஐந்து முறை அவுட்டாகும் வாய்ப்பிலிருந்து தப்பினார். சுமார் 10 மணி நேரம் களத்திலிருந்து, 388 பந்துகளை எதிர்கொண்டு, ஜஸ்டின் கிரீவ்ஸ் முதல் இரட்டை சதத்தை பதிவு செய்ததுடன், தனது அணியையும் தோல்வியிலிருந்து காப்பாற்றினார். அவருக்கு கெமர் ரோச் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். கடைசி நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட் இழப்புக்கு 467 ரன்கள் எடுத்து போட்டியை டிரா செய்தது. ஜஸ்டின் கிரீவ்ஸ் 202 ரன்களுடனும், கெமர் ரோச் 58 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். மேட் ஹென்றி மற்றும் நாதன் ஸ்மித் காயமடைந்ததால் நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சு பலவீனமாகி முதல் டெஸ்ட்டை வெல்லும் வாய்ப்பு நழுவிப்போனது. இரட்டை சதமடித்த மேற்கிந்திய தீவுகள் வீரர் ஜஸ்டின் கிரீவ்ஸ்-க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
ஜஸ்டின் கிரீவ்ஸ் இரட்டை சதம்; மே.இ.தீவுகள் போராடி டிரா
