அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரிட்டிஷ் ஒளிபரப்பு நிறுவனமான பிபிசி மீது அவதூறு வழக்குத் தொடுத்துள்ளார். டொனால்டு டிரம்ப் முன்னர் அதிபராக இருந்தபோது, 2021 ஜனவரி 6ஆம் தேதி வாஷிங்டன் கலவரத்திற்கு முன்னர் அவர் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை ஆவணப்படத்தில் பிபிசி திருத்தி வெளியிட்டதே இந்த வழக்கிற்குக் காரணம். இந்த வழக்கில் டிரம்ப், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக்கூறி, குறைந்தபட்சம் 10 பில்லியன் டாலருக்கு மேல்) இழப்பீடாகக் கோரியுள்ளார்.
உரையின் முக்கிய பகுதியை நீக்கியதாக குற்றச்சாட்டு
பிபிசி-யின் “பனோரமா” ஆவணப்படம், டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் வாஷிங்டன் நோக்கி செல்லுங்கள் மற்றும் நரகத்தைப் போலப் போராடுங்கள் என்று பேசிய பகுதிகளை மட்டும் இணைத்து வெளியிட்டதாக டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த எடிட்டிங்கின் மூலம், தான் வன்முறைக்குத் தூண்டியதாக தவறான எண்ணம் பார்வையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது; ஆனால், அதே உரையில் தான் அமைதியான முறையில் போராட்டம் நடத்துமாறு தான் விடுத்த அழைப்பின் மிக முக்கியமான பகுதியை பிபிசி திட்டமிட்டு நீக்கிவிட்டது என்றும் டிரம்ப் தனது வழக்கில் குறிப்பிட்டுள்ளார். இந்தச் செயல், டிரம்ப்புக்கு மிகப்பெரிய அவதூறு மற்றும் நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
பிபிசி-யின் மன்னிப்பும், சட்டரீதியான நிலைப்பாடும்
இந்த எடிட்டிங் ஒரு “தவறான தீர்ப்பு” என்று பிபிசி ஒப்புக்கொண்டு, டிரம்ப்பிடம் மன்னிப்பு கோரியுள்ளது. வன்முறைக்கு நேரடியான அழைப்பு விடுத்தது போன்ற தவறான தோற்றத்தை அளித்ததை பிபிசி ஏற்றுக்கொண்டாலும், இந்த வழக்கை எதிர்கொள்ள சட்டரீதியாக எந்த அடிப்படையும் இல்லை என்று அது தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் பிபிசி-யின் 103 ஆண்டு கால வரலாற்றில் ஒரு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சை காரணமாக, அதன் இரண்டு உயர்மட்ட அதிகாரிகள் ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ஆவணப்படத்தை மீண்டும் ஒளிபரப்ப எந்தத் திட்டமும் இல்லை என பிபிசி உறுதி செய்துள்ளது.
அமெரிக்க நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம்
டிரம்ப் இந்த வழக்கை இங்கிலாந்தில் அல்லாமல், அமெரிக்காவின் மியாமி ஃபெடரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இங்கிலாந்தில் அவதூறு வழக்கு தொடுப்பதற்கான காலக்கெடு முடிந்துவிட்டதால், அவர் அமெரிக்காவைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று சட்ட நிபுணர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்காவில், பேச்சுரிமை மற்றும் பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அரசியலமைப்புச் சட்டங்கள் வலுவாக இருப்பதால், டிரம்ப் தன் வழக்கை நிலைநிறுத்துவது சவாலானது. எடிட்டிங் பொய்யானது மற்றும் அவதூறானது என்பதை மட்டும் அவர் நிரூபித்தால் போதாது; பிபிசி வேண்டுமென்றே பார்வையாளர்களைத் தவறாக வழிநடத்தியது அல்லது பொறுப்பற்ற முறையில் செயல்பட்டது என்பதையும் அவர் நிரூபிக்க வேண்டும். பிபிசி தரப்பு, ஆவணப்படம் அடிப்படையில் உண்மையே என்றும், எடிட்டிங் முடிவுகள் தவறான எண்ணத்தை உருவாக்கவில்லை என்றும் வாதிட வாய்ப்புள்ளது.
